தேடுதல்

திருத்தந்தையுடன் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ்  திருத்தந்தையுடன் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ்   (Vatican Media)

பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார் திருத்தந்தை

திருத்தந்தைக்கும் பாலஸ்தீன் அதிபருக்கும் இடையே நீடித்த 30 நிமிட சந்திப்பின்போது தூதரக உறவுகள், போர்ச்சூழல், மனிதாபின நிலை, இரு நாட்டிற்கும் இடையே அமைதிக்கான முயற்சிகள், யூபிலி புனித ஆண்டு ஆகியவைக் குறித்து விவாதிக்கப்பட்டது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

டிசம்பர் 12, இவ்வியாழன் காலை, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏறக்குறைய 30 நிமிடங்கள் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

திருத்தந்தையுடனான சந்திப்பிற்குப் பிறகு, அதிபர் அப்பாஸ் அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார் என்றும் உரைக்கிறது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை.

இந்த உரையாடல்களின்போது, காசாவின் மனிதாபிமான நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், போர்நிறுத்தம் மற்றும் பிணையக்கைதிகள் அனைவரையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என்பது குறித்த நம்பிக்கையும் வெளிப்படுத்தப்பட்டது என்றும் அச்செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

மேலும் இச்சந்திப்பின்போது, பாலஸ்தீனிய சமுதாயத்திற்குக் கத்தோலிக்கத் திருஅவையின் முக்கிய பங்களிப்பு, காசாவில் அதன் தற்போதைய மனிதாபிமான முயற்சிகள் உட்பட பல்வேறு காரியங்களும் விவாதிக்கப்பட்டதாக அச்செய்திக் குறிப்பு எடுத்துரைக்கின்றது.

அத்துடன் வன்முறையால் அல்ல, மாறாக தூதரக உறவுகள் மற்றும் உரையாடல் வழியாக இரு நாடுகளின் தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும், எருசலேமிற்குச்  சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இந்த விவாதங்கள் உள்ளடக்கியதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை குறிப்பிடுகின்றது.

இறுதியாக, கத்தோலிக்கத் திருஅவையில் வரவிருக்கும் 2025 புனித ஆண்டு குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், மேலும் யூபிலி ஆண்டில், புனித பூமிக்குத்  திருப்பயணிகள் வருவதற்கு வழிவகுக்கும் என்று நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டது என்றும் அச்செய்திக் குறிப்பு கூறுகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் சந்திப்பின் இறுதியில் வழக்கம்போல இருவரும் பல்வேறு பரிசுப்பொருள்களைப் பரிமாறிக்கொண்டதாகவும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2024, 14:58