தேடுதல்

இத்தாலிய Bocce கூட்டமைப்பினருடன் திருத்தந்தை இத்தாலிய Bocce கூட்டமைப்பினருடன் திருத்தந்தை   (VATICAN MEDIA Divisione Foto)

Bocce விளையாட்டு என்பது மிகவும் மனதைக் கவரும் ஒன்று!

Bocce விளையாட்டு பழமையானதாக தோன்றினாலும், இது மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் ஓர் அற்புதமான விளையாட்டு. இதில் சாதாரண மக்கள் பேரார்வம் கொண்டு ஈடுபாட்டுடன் விளையாடுகின்றனர் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஒருவருடன் ஒருவர் நேரத்தை கழிக்கவும், நலமான மற்றும் அமைதியான பொழுதுபோக்கை அனுபவிக்கவும் Bocce விளையாட்டு ஒரு வழியைக் காண்பிக்கிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 20, வெள்ளி இன்று, திருப்பீடத்தில் இத்தாலிய Bocce கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, இரண்டு காரணங்களுக்காக போச்சே (Bocce) விளையாட்டை மிகவும் மனதைக் கவரும் ஒன்றாக தான் உணர்கிறேன் என்று கூறி அதற்குரிய விளக்கத்தையும் அளித்தார்.

முதலாவது, பில்லியன் டாலர் ஒப்பந்தங்களுடன் இருக்கும் புகழ்மிக்க விளையாட்டுகளை முந்திக்கொண்டு ஊடகங்களில் ஆட்சி செய்யும் விளையாட்டுகளுடன் ஒப்பிடும்போது, இது பணிவை வெளிப்படுத்தும் ஒரு விளையாட்டு என்பதை அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால், Bocce விளையாட்டு  பழமையானதாக தோன்றினாலும், மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் ஓர் அற்புதமான விளையாட்டு என்றும், இதில் சாதாரண மக்கள் பேரார்வம் கொண்டு ஈடுபாட்டுடன் விளையாடுகின்றனர் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

இரண்டாவதாக, இந்த விளையாட்டை நான் ஒரு குறிப்பிட்ட வகையான சமூகத் தொடர்பு மற்றும் சமூக நட்பின் ஒரு வடிவத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறேன் என்று கூறிய திருத்தந்தை, முந்தைய காலங்களில் இது கிராமப்புறங்களில் மிகவும் புகழ்பெற்றதாக இருந்தது. பங்குத்தளங்களிலும் கூட போச்சே  விளையாடப்பட்டது என்றும், ஒன்றாக நேரத்தை செலவிடுவதற்கும், நலமான மற்றும் அமைதியான பொழுதுபோக்கை அனுபவிப்பதற்கும் இது ஒரு வழியாக அமைகிறது என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளையில் இப்போது, சமூகம் மாறிவிட்டது, போச்சே விளையாடும் மாறிவிட்டது என்றும், இப்போது பெண்களும் இளையவர்களும் இதை விளையாடுகிறார்கள்; மாற்றுத்திறனாளிகள் பலரும் இதை பழகுகிறார்கள் அதற்காக உங்களுக்கு நான் வாழ்த்துகள் தெரிவிக்கிறேன் என்றும் உரைத்தார் திருத்தந்தை.

அன்பிற்குரிய நண்பர்களே, ஒரு சங்கமாக நீங்கள் போட்டித் தரத்தில் அடைந்துள்ள சாதனைகளுக்கும், குறிப்பாக வணிகமயமாக்கப்பட்ட விளையாட்டு இயந்திரத்தின் மத்தியில் ஒரு மாற்று விளையாட்டை ஊக்குவிப்பதற்காக உங்களை நான் பாராட்டுகிறேன் என்றும் அவர்களை வாழ்த்தினார் திருத்தந்தை.

இறுதியாக, போச்சே விளையாட்டு ஓர் ஒருங்கிணைந்த விளையாட்டாகவே இருந்து வருகிறது என்றும், இது விளையாட்டு மற்றும் நல்ல நட்பு உணர்வை தக்கவைத்துக் கொண்டுள்ளது என்றும் கூறி பெருமிதம் கொண்டார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 December 2024, 14:43