உரோம் நகர மக்களே, உங்கள் இல்லங்களின் கதவுகளைத் திறந்திடுங்கள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
யூபிலி ஆண்டு கொண்டாட்டத்திற்காக, உலகம் முழுவதிலுமிருந்து விண்ணக நகரமாகக் கருதப்படும் உரோமைக்குப் பயணம் மேற்கொள்ளும் இலட்சக்கணக்கான திருப்பயணிகளை வரவேற்குமாறு உரோம் நகர மக்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 25 முதல் 27 வரை நடைபெறும் பதின்ம வயதினரின் யூபிலி மற்றும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை நடைபெறும் இளைஞர்களின் யூபிலி பற்றியும் இந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தச் சந்திப்புகள், நம்பிக்கையின் சிறந்த அடையாளமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்கள் தங்கள் தலத்திருஅவைகள் மற்றும் சமூகங்களின் வளமான நம்பிக்கையை தங்கள் இதயங்களில் சுமந்துகொண்டு, அமைதி மற்றும் ஒன்றிப்பின் உலகத்தை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்புடன் இங்கு வருகை தரவிருக்கின்றனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
உங்கள் இல்லங்களைத் திறந்திடுங்கள்
அதனைத் தொடர்ந்து உரோமை நகரின் குடும்பங்கள், பங்குத்தளங்களச் சமூகங்கள் மற்றும் துறவு சபையினரை, இந்த இளைஞர்களை வரவேற்க உங்கள் வீடுகளைத் திறந்து, அவர்களுக்கு நட்பு மற்றும் அவர்களின் மகிழ்ச்சியில் பங்கேற்பதற்கான அடையாளத்தை வழங்கிடுங்கள் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
பல்வேறு நாடுகளிலிருந்து வரும் இளையோருக்கு நீங்கள் வழங்கவிருக்கும் வரவேற்பு, உபசரிப்பு யாவும் உங்களுக்கு புதுவிதமான அனுபவங்களைத் தரும் என்றும், குறிப்பாக இளையோர் தங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இடையே நல்ல உறவுகளை வளர்க்க உதவும் நல்லதொரு சந்தர்பமாகவும் இது அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, உங்கள் தாராள மனப்பான்மை மற்றும் விருப்பத்தின் மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று கூறியுள்ள திருத்தந்தை அவர்கள் அனைவரையும் உரோமையின் பாதுகாவலியாம் அன்னை மரியாவின் பாதுகாப்பில் ஒப்படைத்து இறைவேண்டல் செய்வதாகவும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்