தேடுதல்

அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் திருத்தந்தை அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் திருத்தந்தை   (AFP or licensors)

திருத்தந்தை, ஜோ பிடனுடன் தொலைபேசியில் உரையாடினார்

இந்த உரையாடலின்போது மரண தண்டனையை நீக்குவது உட்பட பல்வேறு முக்கிப் பிரச்னைகள் குறித்து விவாதித்ததாகவும், கிறிஸ்து பிறப்புக் காலத்தில் அமைதியை ஏற்படுத்துவதில் முன்னேற்றம் காண்பதை தங்கள் உரையாடலின் முக்கியக் கருப்பொருளாகக் கொண்டதாவும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட அறிக்கை தெரிவிக்கிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அமெரிக்க அரசுத் தலைவர் ஜோ பிடன் அவர்களுடன் டிசம்பர் 19, இவ்வியாழன் இரவு தொலைபேசியில் உரையாடியதாகவும், பிடன் தனது பதிவிக் காலத்தை முடிக்கும் வேளையில் இந்த உரையாடல் இடம்பெற்றது என்றும்  அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

இந்த உரையாடலின்போது மரண தண்டனையை நீக்குவது உட்பட பல்வேறு முக்கிப் பிரச்னைகள் குறித்து விவாதித்ததாகவும், கிறிஸ்து பிறப்புக் காலத்தில் அமைதியை ஏற்படுத்துவதில் முன்னேற்றம் காண்பதை தங்கள் உரையாடலின் முக்கியக் கருப்பொருளாகக் கொண்டதாவும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுமுறைக் காலங்களில் உலகம் முழுவதும் அமைதியை முன்னேற்றுவதற்கான முயற்சிகள் குறித்து இருவரும் விவாதித்தனர் என்றும், மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கும் மதச் சுதந்திரங்களைப் பாதுகாப்பதற்கும் திருத்தந்தை செய்த பணிகளுக்கும், உலகளாவியத் துன்பங்களைப் போக்க அவர் விடுத்த  தொடர் வேண்டுகோள்களுக்கும் பிடன் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்ததாகவும் உரைக்கிறது அவ்வறிக்கை .

அடுத்த மாதம் வத்திக்கானுக்கு வருமாறு திருத்தந்தை விடுத்த அழைப்பை பிடன் ஏற்றுக்கொண்டதாகவும், அமெரிக்க அரசுத் தலைவராக, ஜனவரி 20-ஆம் தேதி வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு முன், வத்திகானுக்கான அவரது பயணம் இறுதிப் பயணமாக இருக்கும் என்றும் அச்செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 December 2024, 15:09