கிறிஸ்து பிறப்பு வியப்படைவதற்குரிய ஒரு சிறப்புத் தருணம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடவுளின் அன்பு மற்றும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் அன்பைக் கண்டு வியப்படையைக் கற்றுக்கொள்வோம். இந்த வியப்பையும் மகிழ்ச்சியையும், வீட்டிற்கு வீடும், பங்கிற்குப் பங்கும், நகரத்திற்கு நகரமும், மற்றும் நாட்டிற்கு நாடும் பரப்புவோம் என்றும், அவ்வாறு செய்வதன் வழியாக, மற்றவர்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், ஆறுதலையும் தருகிறோம் என்பதை உணர்ந்துகொள்வோம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
டிசம்பர் 20, வெள்ளி இன்று, கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி ACR அமைப்பின் இளையோரை திருப்பீடத்தில் சந்தித்தபோது அவர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, தேவையில் இருப்போருடன் எப்போதும் இணைந்திருங்கள் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
"ஆழத்திற்குச் செல்லுங்கள்" என்பதை இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இது முதல் சீடரின் அழைத்தலை நினைவுபடுத்துகிறது என்றும், மீனவர்களான அவர்களை இயேசு அழைத்து மக்களைப் பிடிப்பவர்களாக ஆக்கினார் (காண். லூக்கா 5:1-11) என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை, மீன்பிடித்தல் மற்றும் வியப்பு குறித்த இரண்டு படங்களைப் பற்றி அவர்களுடன் இணைந்து சிந்திக்க விழைவதாகக் கூறினார்.
01. மீன்பிடிப்பது - மக்களுக்கான மீனவர்களாக இருப்பது
முதலாவதாக, மீன்பிடிப்பது. இதன் பொருள் என்ன? ஒருவேளை நவீன வலைகள் மூலம் மக்களைப் பிடிப்பதை இது குறிக்கிறதா? நிச்சயமாக இறைவன் இதனை விரும்புவது இல்லை என்று உரைத்த திருத்தந்தை, கடவுள் நம் சுதந்திரத்தை மதிக்கிறார், அவர் யாரையும் பிடிக்க விரும்பவில்லை. மாறாக, நிபந்தனைகள் அல்லது விலக்குகள் இல்லாமல் அனைவருக்கும் அவர் தனது அன்பையும் மீட்பையும் வழங்குகிறார் என்று விளக்கினார்.
தந்தையின் அன்பு மகனாக இருப்பதன் மகிழ்ச்சியை இயேசு நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் என்று மொழிந்த திருத்தந்தை, எல்லோரையும் வரம்பில்லாமல் அன்புகூரும், ஒரு வியக்கத்தக்க தந்தை எனக்கு இருக்கிறார், நீங்கள் அவரை அறிந்து கொள்ள வேண்டும், அதனால் நீங்கள் என்னுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறியும், அவருடைய அன்பின் மகிழ்ச்சியையும் வியப்பையும் பகிர்ந்துகொள்வதன் வழியாகவும் இயேசு மக்களை மீனவர்களாக ஆக்குகிறார் என்றும் எடுத்துக்காட்டினார்.
02. வியப்பு - வியப்படையக் கற்றுக்கொள்வது
கிறிஸ்து பிறப்பு வியப்படைவதற்குரிய ஒரு சிறப்பு தருணமாகும். விளக்குகள் வீதிகளை நிரப்புகின்றன, பரிசுகள் பரிமாறப்படுகின்றன, மேலும் அழகான பாடல்கள் வழிபாட்டை மகிழ்ச்சிக்குரியதாக மாற்றுகின்றன என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இயேசுவின் பிறப்புக் காட்சி எவ்வளவு வியப்பை வெளிப்படுத்துகிறது! இடையர்கள், மூன்று அரசர்கள் மற்றும் மற்றவர்கள் அதன் முன்பாக வியப்படைகின்றனர் என்றும், இது விலங்குகளையும் இயற்கையையும் கூட உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைகிறது என்றும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார் .
ஆனால் இந்த வியப்பு என்பது, கிறிஸ்து பிறப்பில் மட்டும் வரையறுக்கப்படுவதில்லை. நமது முழு வாழ்க்கையும் கடவுள் நமக்கு வழங்கியுள்ள வியப்புக்குரிய ஒரு கொடை என்றும், நாம் ஒவ்வொருவரும் தனித்துவம் கொண்டவர்களாக இருக்கிறோம் என்றும், ஒவ்வொரு நாளுமே நமக்கு சிறப்புக்குரியதாக இருக்கின்றது என்றும் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
தேவையில் இருப்போருக்கு நீங்கள் பரிசுகளைக் கொண்டுவந்துளீர்கள் என்பதை நான் அறிகிறேன், வறுமை, போர் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள உங்களைப் போன்ற இளையோருக்கு உங்களின் இரக்கமிகு செயல்களாலும், இறைவேண்டல்களாலும் அவர்களின் அருகில் இருக்க நான் உங்களை ஊக்குவிக்கிறேன் என்று மொழிந்த திருத்தந்தை, இவ்வாறு செய்வதன் வழியாக, “உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” (லூக் 2:14).என்று கடவுளைப் புகழ்ந்த தூதர்களின் பாடலை நீங்கள் எதிரொலிக்கச் செய்கிறீர்கள் என்றும் அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்