புதன் மறைக்கல்வி உரை - தூய ஆவியும் நற்செய்தி அறிவிப்பும்

டிசம்பர் 4 புதன்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு தூய ஆவியாரும் நற்செய்திஅறிவிப்பும் என்ற தலைப்பில் தனது மறைக்கல்வி உரைக் கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருவருகைக் காலத்தின் முதல் வாரமும், மாதத்தின் முதல் வாரமுமாகிய டிசம்பர் 4 புதன்கிழமையன்று வத்திக்கான் வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகள் அனைவருக்கும் தூய ஆவியாரும் மணமகளும், நமது நம்பிக்கையாம் கிறிஸ்துவை எதிர்நோக்கி நம்மை வழிநடத்தும் தூய ஆவியார் என்ற தொடர் மறைக்கல்வி உரையின் 16ஆவது பகுதியாக தூய ஆவியில் நற்செய்தியை அறிவித்தல், தூய ஆவியும் நற்செய்தி அறிவிப்பும் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரில் கடந்த இரவு பெய்த மழையின் காரணமாக காற்றில் ஈர்ப்பதமும் குளிர்ச்சியும் நிறைந்திருக்க, அக்குளிரிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து திருப்பயணிகள் திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக்கு செவிசாய்க்க வத்திக்கான் வளாகத்தில் குழுமியிருந்தனர். கூடியிருந்த திருப்பயணிகள் அனைவர் மத்தியிலும் திறந்த காரில் வலம் வந்து அவர்களை வாழ்த்தினார் திருத்தந்தை. சிலுவை அடையாளம் வரைந்து கூட்டத்தைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கியதும், திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலில் உள்ள சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி என்னும் தலைப்பின் கீழ் உள்ள இறைவார்த்தைகள் பல்வேறு இத்தாலியம், ஜெர்மானியம், அரபு, பிரெஞ்சு, போர்த்துக்கீசியம், போலந்து, ஆங்கிலம் போன்ற வழக்கமாக வாசிக்கப்படும் ஐரோப்பிய மொழிகளில் மட்டுமல்லாது முதன்முதலாக சீன மொழியிலும் வாசித்தளிக்கப்பட்டன.

1 கொரிந்தியர் 2: 1, 4-5

சகோதர சகோதரிகளே, கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால், அது தூயஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே.

இறைவார்த்தைகள் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தூய ஆவியும் நற்செய்தி அறிவிப்பும் என்ற தலைப்பில் தனது கருத்துக்களைத் திருப்பயணிகளுக்கு எடுத்துரைத்தார். திருத்தந்தையின் மறைக்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

திருஅவைப் பணியில் தூய ஆவியாரின் பணி மற்றும் அவரின் ஈர்ப்புள்ள செயல்களைப் பற்றி நமது தொடர் மறைக்கல்வி உரையில் சிந்தித்த நாம் இன்று நற்செய்தி அறிவிப்புப் பணியில் அவருடைய பங்கைப் பற்றிக் காணலாம்.    

திருத்தூதர் பேதுரு தனது முதல் திருமடலில் விண்ணினின்று அனுப்பப்பட்ட தூய ஆவியால் உங்களுக்கு நற்செய்தி அறிவித்தவர்கள், அவர்கள் முன்னறிவித்தவற்றை இப்போது உங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். இவற்றை அறிந்து கொள்ள வானதூதர்களும் ஆவலோடிருந்தார்கள் என்று எடுத்துரைக்கின்றார். இதன் அடிப்படையில் கிறிஸ்தவ போதனைகளின் இரண்டு கூறுகளைக் காணலாம். ஒன்று உள்ளடக்கமாகிய நற்செய்தி, மற்றொன்று அதன் வழிமுறையாகிய தூய ஆவியார்.   

புதிய ஏற்பாட்டில், "நற்செய்தி" என்ற வார்த்தைக்கு இரண்டு முக்கிய அர்த்தங்கள் உள்ளன. இது மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்திகளில் கூறப்பட்டுள்ளதன் அர்த்தத்தில், நற்செய்தி என்பது இயேசுவால் அவரது பூமிக்குரிய வாழ்க்கையில் அறிவிக்கப்பட்ட நற்செய்தி என்றும், அவரது உயிர்ப்பிற்குப் பிறகு, இயேசுவைப் பற்றிய நற்செய்தியின் புதிய பொருளாகிய கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்ப்பின் பாஸ்கா மறைபொருள் என்றும் பொருள்பட்டது. நற்செய்தியை முன்னிட்டு வெட்கப்படமாட்டேன்; ஏனெனில், அதுவே கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை. முதலில் யூதருக்கும், அடுத்துக் கிரேக்கருக்கும் அதாவது நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவருக்கும் அந்த மீட்பு உண்டு என்று திருத்தூதர் பவுல் நற்செய்தி என்பது குறித்து தனது மடலில் எழுதுகின்றார்.

இயேசுவின் போதனையும், அவரைத் தொடர்ந்த திருத்தூதர்களின் போதனையும்  முதலில் பத்துக் கட்டளைகளில் தொடங்கி, அன்பின் "புதிய" கட்டளையுடன் முடிவடைகின்றது. கிறிஸ்து நமக்காகச் செய்ததை அறிவிப்பதில் இருந்து நற்செய்தி அறிவிப்பு மீண்டும் மீண்டும் தொடங்குவது அவசியம். எனவே தான் அப்போஸ்தலிக்க அறிவுரையான எவாஞ்சலி கௌடியம் கெரிக்மா அல்லது "அறிவிப்பு என்பதை அதிகமாக வலியுறுத்துகின்றது.

நற்செய்தி அறிவிப்பின் உள்ளடக்கத்தைப் பார்த்த நாம், அவ்வறிவிப்பின் வழிமுறைகளையும் மனதில் கொள்ள வேண்டும். நற்செய்தி தூய ஆவியின் வழியாக அறிவிக்கப்பட வேண்டும். இயேசு தனது பணி வாழ்வின் தொடக்கத்தில் கூறிய வார்த்தைகளான, “ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.” என்பதை நாம்  நினைவில் வைத்து நற்செய்தியை அறிவிக்க வேண்டும். தூய ஆவியின் அருளுடன் நற்செய்தியை அறிவிப்பது என்பது கருத்துக்கள் மற்றும் கோட்பாடுகள், வாழ்க்கை மற்றும் ஆழ்ந்த நம்பிக்கையுடன் அதனைப் பிறருக்கு எடுத்துச் செல்வதாகும். திருத்தூதர்  புனித பவுல் தனது மடலில் எழுதியது போல், "நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால், அது தூயஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது என்ற அர்த்தத்தில் நமது நற்செய்தி அறிவிப்புப் பணி இருக்கவேண்டும்.

இதனைச் சொல்வது எளிது என்று அதனை நாம் எதிர்க்கலாம். அது நம்மைச் சார்ந்தது அல்ல, தூயஆவியின் வருகையைப் பொறுத்தது என்றால் அதை எப்படி நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது? உண்மையில், நம்மைச் சார்ந்த இரண்டு விடயங்கள் உள்ளன. முதலாவது செபம். தூய ஆவியார் செபிப்பவர்கள் மீது வருகிறார், ஏனென்றால் "விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!” என்று நற்செய்தியில் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக அவருடைய மகனின் நற்செய்தியை அறிவிக்கும்படி ஒருவர் செபிக்கும்போது அவர் கட்டாயம் அந்தத்தூய ஆவியை அவருக்கு வழங்குவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செபிக்காமல் போதிப்பவர்களுக்கு ஐயோ கேடு, அவர்கள்,  நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன் என்பது போல மாறுகின்றார்கள்.

முதலாவதான செபம் நம்மைச் சார்ந்தது, இரண்டாவது போதனை. போதிக்கும்போது ஒருவர் தன்னைப்பற்றி எடுத்துரைக்காமல் கிறிஸ்து இயேசுவைப்பற்றி எடுத்துரைப்பவர்களாக இருக்கவேண்டும். நாங்கள் எங்களைப் பற்றி அல்ல, இயேசு கிறிஸ்துவைப் பற்றியே அறிவிக்கிறோம்; என்ற பவுலின் வார்த்தைகளைக் கடைபிடிக்கவேண்டும். 20, 30 நிமிடங்கள் மறையுரைகளைப் பல நேரங்களில் நாம் காண்கின்றோம். ஒரு சிந்தனை, ஒரு செயல், ஒரு அழைப்பு போன்றவற்றை உள்ளடக்கியதாக நமது மறையுரைகள், போதனைகள் இருக்கக் கவனிப்போம். 8 நிமிடங்களுக்கு மேலாக செல்லும் மறையுரைகளும் போதனைகளும் வீணானவை என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். நீளமான நெடிய மறையுரைகளினால் ஆலயத்திலிருந்து பலர் வெளியேறி புகைபிடித்துவிட்டு திரும்பி வருகின்றனர். எனவே மறையுரையாளர்கள் தங்களது போதனைகளை, குறுகியதாக, 10 நிமிடங்களுக்கு அதிகமாக இல்லாத வண்ணம் பார்த்துக்கொள்வது மிக முக்கியமானது  

தூய ஆவியார் நமக்கு உதவியாக, உறுதுணையாக இருந்து திருஅவையில் உள்ள ஒவ்வொருவருக்கும் நற்செய்தியை அறிவிக்கக் கற்றுத்தரட்டும் அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறைக்கல்வி உரையினை நிறைவு செய்ததும் கூடியிருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார். டிசம்பர் 8 திரு அவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் அன்னை மரியின் அமல உற்பவப் பெருவிழாவை நினைவுகூர்ந்த திருத்தந்தை அவர்கள், பாவ மாசின்றி முழுமையுடன் வாழ்ந்த அன்னை மரியா போல நாமும் வாழ வாழ்த்தினார். தொடங்கியுள்ள திருவருகைக் காலமானது அன்னை மரியின் ஒளி நிறைந்த எடுத்துக்காட்டை இந்நாள்களில் நமக்கு எடுத்துரைக்கின்றது என்றும், கிறிஸ்துவை கடைபிடிக்கும் நமது பயணத்தில் அவர் நம்மைத் தூண்டி, நமது எதிர்நோக்கை நிலைநிறுத்தட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

அமைதிக்காக தொடர்ந்து செபிப்போம். மனித குலத்தின் தோல்வியான போர் பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது. போர் மோசமானது, அழிவை ஏற்படுத்துகின்றது. போரினால் துன்புறும் நாடுகளுக்காகவும் மக்களுக்காகவும் செபிப்போம். உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், மியான்மார் மக்களுக்காக செபிப்போம். போரினால் பல குழந்தைகள், அப்பாவி மக்கள் இறக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இறைவனின் அமைதி கிடைக்க செபிப்போம். அமைதிக்காக செபிப்போம் என்றும் எடுத்துரைத்து தனது செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அதன் பின் விண்ணகத் தந்தையை நோக்கிய செபம் இலத்தீன் மொழியில் பாடப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பயணிகளுக்கு தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 December 2024, 08:45

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >