வாழ்வின் முக்கிய கூறுகள் : வழிபடுதல், சேவையாற்றல், நடைபோடுதல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
புனிதர்கள் திருமுழுக்கு யோவான் மற்றும் நற்செய்தியாளர் யோவான் ஆகியோர் பெயரிலான Knights of Maltaவின் Catanzaro நகர் சகோதரத்துவக் கூட்டமைப்பின் அங்கத்தினர்களை ஜனவரி 3ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒப்புரவு மற்றும் நம்பிக்கையின் காலமாகிய இந்த யூபிலி கொண்டாட்டத்தின்போது அவர்களைச் சந்திப்பதில் தான் மகிழ்வதாக எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழிபடுதல், சேவையாற்றல் மற்றும் நடைபோடுதல் என்ற மூன்று விடயங்கள் குறித்து அவர்களுடன் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
திருநற்கருணையின் முன் ஒரே குடும்பமாகக் கூடும் இந்த சகோதரத்துவ கூட்டமைப்பினர், குறிப்பாக இந்த யூபிலி ஆண்டில் தனிப்பட்ட முறையிலும் குழுமமாகவும் செபவாழ்வை தங்களுக்குள் கட்டியெழுப்ப வேண்டும் என அவர்களுக்கு தான் அழைப்புவிடுப்பதாக உரைத்த திருத்தந்தை, சகோதரத்துவ வாழ்வை புதுப்பிப்பதற்கு செபம் இன்றியமையாதது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இரண்டாவது கருத்தாக செவையாற்றுதல் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, வழிபாட்டிற்கும் சேவையாற்றலுக்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்தும் எடுத்துரைத்தார்.
ஏழைகளை, நோயாளிகளை, துன்புறுவோரை சந்தித்து நாம் அவர்களோடு இருக்கும்போது கிறிஸ்துவுக்கே பணியாற்றுகிறோம் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வுலகில் பணியாற்றவே வந்த கிறிஸ்துவின் திராட்சைக் கிளைகளாகிய நாம், அந்த பிறரன்புப் பணிகளை எடுத்து நடத்துபவர்களாகச் செயல்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நடைபோடுதல் என்ற மூன்றாவது கருத்து குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, நம் வழியாகிய இயேசுவைப் பின்தொடர்ந்து நாம் நடைபோடவேண்டியதை நினைவூட்டினார்.
நம் இவ்வுலகப் பயணம் உறுதிப்பாட்டுடனும், விசுவாசத்தின் ஒளியுடனும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்த திருத்தந்தை, நம்பிக்கையுடன் தாராளமனத்தின் பாதையில் நடைபோடும்போது, கடவுள் நம்மோடு இணைந்து நடப்பார் என மேலும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்