மனிதப் பற்றாக்குறையில் மிகுதியாக வெளிப்படும் கடவுளின் அருள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
மனிதன் தனது பற்றாக்குறையின்போது கடவுளிடம் கேட்கும்போது, கடவுள் தனது மிகுதியான அருளினால் பதிலளிக்கின்றார் என்றும், கடவுள் கருமியோ அல்லது சிறிதளவு கொடுப்பவரோ அல்ல, மாறாக தனது அளவற்ற மிகுதியினால் பதிலளிப்பவர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 19 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செபஉரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கானாவூர் திருமணத்தில் இயேசு செய்த முதல் அருளடையாளம் குறித்தக் கருத்துக்களைத் திருப்பயணிகளிடம் பகிர்ந்து கொண்டார்.
கானாவூர் திருமண விருந்தில் பற்றாக்குறை, மிகுதி என்னும் இரண்டு அளவுகள் இருப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஒருபுறம் அன்னை மரியா இயேசுவிடம் திருமண இரசம் இல்லை என்று கூறுகின்றார், மறுபுறம் இயேசு, ஆறு கற்சாடிகளில் உள்ள தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றுகின்றார் என்று கூறி மனிதனின் பற்றாக்குறை கடவுளின் அருளால் மிகுதியானதாக மாறுகின்றது என்றும் கூறினார்.
திராட்சை இரசமாக மாறியிருந்த தண்ணீரை சுவைத்த பணியாளரின் மேற்பார்வையாளர், நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்? என்று மணமகனிடம் கேட்பதன் வழியாக, பற்றாக்குறையில் எப்போதும் கடவுளின் அடையாளம் வெளிப்படுகின்றது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், நமது வாழ்வென்னும் விருந்தில் திராட்சை இரசம் என்னும் ஆற்றல்களும் இன்னும் பலவும் குறைவுபடுகின்றன என்றும், கடவுளின் அடையாளம் அப்போது மிகுதியாக வெளிப்படுகின்றது என்றும் எடுத்துரைத்தார்.
நமது வருத்தங்கள் நம்மை கவலைக்குட்படுத்தும்போது, நமது பயங்கள் அதிகரிக்கும்போது, அவை நம்மைத் தாக்கும்போது, தீமையினால் நமது ஆற்றல்கள் உடையும்போது, அவை நமது வாழ்வின் சுவையை, மகிழ்வின் சுவையை, எதிர்நோக்கின் சுவையை நம்மிடமிருந்து பறிக்கும்போது, நாம் நமது ஆற்றல்களை இழக்கின்றோம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இது குறித்து நாம் கவனமாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
புதிய திராட்சை இரசமாகிய அன்னை மரியாவிடம் வேண்டுவோம் அவர் நமக்காக பரிந்து பேசுவார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இந்த யூபிலி ஆண்டில் இயேசுவைச் சந்திப்பதன் வழியாக மகிழ்வினை நாம் மீண்டும் கண்டறிய அன்னை மரியா நமக்கு உதவுவாராக என்று கூறி மூவேளை செபத்திற்குப் பின் தன் அப்போஸ்தலிக்க ஆசீரைத் திருப்பயணிகளுக்கு வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்