இறைத்தந்தையின் முகத்தையும் குரலையும் அறிந்துகொள்வோம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இறைமகன் இயேசு வழியாக இறைத்தந்தை தனது முகத்தை இவ்வுலக மக்களுக்கு வெளிப்படுத்தினார் என்றும், என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் என்ற குரல் ஒலியாக, இயேசுவை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்தினார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சனவரி 12ம் ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவின் திருமுழுக்கு விழா நமது வாழ்வின் பல நிகழ்வுகளையும், நமது திருமுழுக்கு அருளடையாளத்தையும் நினைவுகூர்கின்றது என்றும், மனமாற்றத்திற்காக பாவ மன்னிப்பு பெற்று திருமுழுக்கு பெறும் மக்கள் கூட்டத்தோடு தன்னை இயேசு இணைத்துக்கொண்டார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வெறுமையான ஆன்மாவோடும் கால்களோடும் திருமுழுக்கு யோவானை நோக்கிச் சென்ற இயேசுவின் மேல் தூய ஆவி தன்னை வெளிப்படுத்துகின்றார் என்றும், "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்ற குரல் வழியாக இறைத்தந்தை தன்னை வெளிப்படுத்துகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இறைத்தந்தை தனது முகம் மற்றும் குரல் வழியாக தன்னை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்துகின்றார் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், முகம், இணக்கமான உறவையும் குரல் மனித நேயத்தையும் வெளிப்படுத்துகின்றது என்று கூறினார்.
இறைமகன் இயேசு வழியாக இறைத்தந்தை தனது முகத்தை இவ்வுலக மக்களுக்கு வெளிப்படுத்தினார் என்றும், மனித குலத்துடனான உரையாடல் மற்றும் ஒன்றிப்பின் உறவிற்குள் நுழைவதற்கான ஒரு சிறப்புமிக்க இடத்தை கடவுள் நிறுவுகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இறைத்தந்தையின் குரலில் மனிதநேயம் வெளிப்படுகின்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்ற குரல் ஒலியானது, இயேசுவை இவ்வுலகிற்கு அடையாளப்படுத்துவதற்கான மற்றொரு அடையாளம் என்றும் கூறினார்.
இறைத்தந்தையின் முகத்தையும் குரலையும் சிந்திக்க அழைக்கும் இன்றைய விழாவானது, இறைமகன் இயேசுவின் மனித நேயத்தை வெளிப்படுத்துகின்றது என்றும், இறைவனால் அன்பு செய்யப்பட்டவர்களாக உடன் வழிநடத்தப்படுபவர்களாக நாம் உணர்கின்றோமா? அல்லது இறைவன் நம்மை விட்டு வெகுதொலைவில் இருப்பதாக உணர்கின்றோமா என சிந்திப்போம் என்று கூறினார் திருத்தந்தை.
இறைத்தந்தையின் முகத்தை இயேசுவிலும் பிறரிலும் கண்டுகொள்ள நாம் முயல்கின்றோமா? அவரது குரலுக்கு செவிசாய்க்கின்றோமா? என்று நமக்குள் நாமே கேள்வி கேட்டுக்கொள்ள அழைப்புவிடுத்த திருத்தந்தை அவர்கள், நாம் திருமுழுக்கு அருளடையாளம் பெற்ற நாளை நினைவில் வைத்திருக்கின்றோமா? அதனை முக்கியமாகக் கருதுகின்றோமா என்றும் சிந்திக்க கேட்டுக்கொண்டார்.
நாம் திருமுழுக்குப் பெற்ற நாளை நமது பிறந்த நாளைப் போன்று சிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், அந்நாள் தூய ஆவியில் நாம் பிறந்த நாள், எனவே அதனை மறந்துவிடக்கூடாது அந்த நாள் என்ன என்று நமது பெற்றோர்கள் மற்றும் ஞானப்பெற்றோர்களிடம் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்