பெண்ணிடம் பிறந்த இயேசு தாழ்ச்சியின் அடையாளம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஜனவரி 1 புதன்கிழமை ஆண்டின் முதல் நாளாகிய இன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற 'கன்னி மரியா கடவுளின் தாய்' என்ற பெருவிழா திருப்பலிக்கு தலைமையேற்று மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கர்தினால்கள், ஆயர்கள் அருள்பணியாளர்கள், துறவறத்தார், பொதுநிலையினர் என ஏறக்குறைய 5500 பேர் பெருங்கோவிலில் கூடியிருக்க சிலுவை அடையாளம் வரைந்து திருப்பலியினைத் துவக்கினார் திருத்தந்தை. எண்ணிக்கை நூலில் இருந்து முதல் வாசகம் பிரெஞ்சு மொழியிலும், திருத்தூதர் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் இருந்து இரண்டாம் வாசகம் இஸ்பானிய மொழியிலும் வாசித்தளிக்கப்பட்டது. அதன்பின் திருத்தொண்டர் ஒருவர் லூக்கா நற்செய்தியில் இருந்து வாசகத்தினை இத்தாலிய மொழியில் வாசித்தளித்தார்.
அதன் பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைவனின் தாயான கன்னி மரியா பெருவிழா திருப்பலி மறையுரையினைத் திருப்பயணிகளுக்கு வழங்கினார், திருத்தந்தையின் மறையுரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.
நமது வாழ்வில் மீண்டும் ஒரு புதிய ஆண்டினை இறைவன் கொடுத்துள்ளார். ஆண்டின் தொடக்கத்தில் நமது எண்ணத்தை அன்னை மரியாவை நோக்கி உயர்த்துவது மிக நல்லது. இறைவனின் தாயான மரியா இயேசுவுடனான நமது உறவை வலுப்படுத்துகின்றார். நம்மை அவரிடம் மீண்டும் கொண்டு சேர்க்கின்றார். அவரைப்பற்றி நம்மிடம் எடுத்துரைத்து அவரிடமே நம்மை அழைத்துச் செல்கின்றார். இவ்வாறாக கிறிஸ்து பிறப்புக் காலத்தில் அன்னை மரியின் பெருவிழா நம்மை மகிழ்வில் ஆழ்த்துகின்றது. கன்னி மரியின் வயிற்றில் இயேசு மனு உருவாகி நம்மில் ஒருவரானார். யூபிலி ஆண்டிற்கான புனிதக் கதவினை நாம் திறந்துதுள்ள நமக்கு இயேசுவை இவ்வுலகிற்குக் கொண்டு வரும் கதவாக நுழைவாயிலாக அன்னை மரியா இருக்கின்றார் என்பதை நமக்கு நினைவூட்டப்படுகின்றது.
காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார் என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகள், நமது மீட்பராகிய இயேசு, எளிய மனிதராக பிறந்தார் என்பதையும் நமது இதயத்தில் எதிரொலிக்கின்றது.
பெண்ணிடம் பிறந்தவர் என்ற வெளிப்பாடு முதலில் நம்மை கிறிஸ்து பிறப்பிற்கு அழைத்துச் செல்கிறது: வார்த்தை மனிதரானார் பெண்ணிடம் பிறந்தவர் என்பதன் வழியாக கடவுளின் மகன் எளிய சாதாரண மனிதனாக பெண்ணிடம் பிறந்தார் என்பதை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகின்றது. நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார். என்பதன் வழியாக இது மேலும் புலப்படுகின்றது. நம்மைப்போல் ஒருவராக பெண்ணிடம் பிறந்ததால் அவரால் நாம் மீட்கப்படுகின்றோம்.
பெண்ணிலிருந்து பிறந்தவர் என்பது கிறிஸ்துவின் மனிதநேயத்தைப் பற்றியும் நம்மிடம் பேசுகிறது. எல்லா உயிர்களையும் போல மிகச்சாதாரணமாக பிறந்தவர் குழந்தையாக மிகவும் பலவீனமானவராக, எளியவராக தன்னை வெளிப்படுத்துகின்றார். அதனால் தான் குழந்தையாக பிறந்த இயேசுவின் பிறப்பை வானதூதர்கள் இடையர்களுக்கு அறிவிக்கின்றனர். இடையர்களும் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். அவர்கள் அசாதாரண அடையாளங்களையோ அல்லது பெரிய வெளிப்பாடுகளையோ காணவில்லை, மாறாக அவர்கள் "மரியாவையும் யோசேப்பையும் குழந்தையையும் கண்டார்கள். மக்களை மீட்க வந்திருக்கும் மீட்பரை எளிய குழந்தையாக தாயின் அரவணைப்பு தேவைப்படுபவராக, பால், உணவு அன்பு தேவைப்படும் ஒரு குழந்தையாகக் காண்கின்றனர். இரக்கம், உடனிருப்பு, கருணை என்னும் கடவுளின் பண்பு கொண்டவராக இருக்கின்றார். இயேசு மனிதகுலத்தின் பலவீனமான தன்மையை பலவீனமானவர்களைக் கவனித்துக்கொள்வதன் வழியாக நமக்குக் காட்டுகிறார்.
நமது மீட்பரான இயேசுவை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்க அன்னை மரியா நமக்கு வழிகாட்டுகின்றார். அவரைச் சந்திக்கும் பேறு பெற்ற இடம் நமது பலவீனமான மனிதநேயம், ஒவ்வொரு நாளும் நம்மைக் கடந்து செல்பவர்களின் வாழ்க்கை என்றும், இதுவே நமது வாழ்வில் முதன்மையானது என்றும் அன்னை மரியா நமக்கு நினைவூட்டுகிறார். அவரைக் கடவுளின் தாய் என்று அழைப்பதன் வழியாக, தந்தையிடமிருந்து வந்த கிறிஸ்து ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து பிறந்தார். காலத்தைக் கடந்த இறைவனின் பிரசன்னம் நம்மோடு எப்போதும் இருக்கவும் அவரே நம்மை மீட்க வந்தவர் என்பதை முழுமனதுடன் ஏற்று வாழவும் முயற்சிப்போம். ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் அவரைத் தேடுவோம். கடவுளின் மகனாகிய இயேசு, தாயின் அரவணைப்பில் எடுத்துக்கொள்ளப்படுதல், பராமரிக்கப்படுதல், என மிகச் சிறியவராக தன்னை தாழ்த்திவிட்டார் என்றால், இன்று அதே கவனிப்பு தேவைப்படும் அனைவரிடமும் வருகிறார் என்று பொருள். கவனம், செவிசாய்ப்பு மற்றும் மென்மை தேவைப்படும் ஒவ்வொரு சகோதர சகோதரியிலும் கடவுளை நாம் சந்திக்க வேண்டும். புலர்ந்திருக்கும் இந்தப் புதிய ஆண்டை, கடவுளின் தாயான மரியாவிடம் ஒப்படைப்போம், வாழ்வின் சிறுமையில் கடவுளின் மகத்துவத்தைக் கண்டறிந்த மரியாவைப் போல நாமும் கடவுளின் மேன்மையை மகத்துவத்தைக் கற்றுக்கொள்ள முயல்வோம். பெண்ணிலிருந்து பிறந்த ஒவ்வொரு உயிரினத்தையும், விலைமதிப்பற்ற உயிராகப் பாதுகாப்பதன் வழியாக அன்னை மரியா செய்தது போல நாமும் செய்வோம். கருவில் உள்ள குழந்தையின் வாழ்க்கை, குழந்தைகளின் வாழ்க்கை, துன்பப்படுபவர்களின் வாழ்க்கை, ஏழைகள், தனிமையில் இறக்கும் முதியோர் ஆகியோரைக் கவனித்துக் கொள்வோம்.
உலக அமைதி தினமாகிய இன்று அன்னை மரியின் இதயத்திலிருந்து வரும் இந்த அழைப்பை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறோம்: வாழ்க்கையைப் போற்றுவதும், காயப்பட்ட வாழ்க்கையைப் பராமரிப்பதும், வாழ்க்கையின் மாண்பை மீட்டெடுப்பதும்"பெண்ணிடம் பிறந்த ஒவ்வொருவரின் வாழ்க்கை அடிப்படையாகும். அமைதி நாகரிகத்தை உருவாக்குவதற்கான அடிப்படை. எனவே, "கருவுருதல் முதல் இயற்கையான மரணம் வரை, மனித வாழ்வின் மாண்பிற்கு மதிப்பளிக்கவேண்டும். இதன் வழியாக ஒவ்வொரு நபரும் தங்களது வாழ்க்கையை அன்பு செய்யவும், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் பார்க்கவும் முடிகின்றது.
கடவுளின் தாயும் நம் தாயுமான மரியா மாட்டுத்தொழுவத்தில் குழந்தை இயேசுவுடன் நமக்காகக் காத்திருக்கிறார். நமக்கும் இடையர்களுக்கும் இயேசுவைக் காட்டுகிறார், வானத்தின் மகிமையில் அல்ல, மாறாக மாட்டுத்தொழுவத்தின் எளிய தன்மையில் நம்மை எப்போதும் ஆச்சரியப்படுத்துகின்றார். இந்த புதிய யூபிலி ஆண்டை அன்னையிடம் ஒப்படைப்போம், நம் இதயத்தில் சுமக்கும் கேள்விகள், கவலைகள், துன்பங்கள், மகிழ்ச்சிகள் மற்றும் அனைத்தையும் உலகம் முழுவதையும் அவரிடம் ஒப்படைப்போம். நமது எதிர்நோக்கு மீண்டும் பிறக்கட்டும், பூமியின் அனைத்து மக்களுக்கும் அமைதி துளிர்விடட்டும்.
இவ்வாறு திருத்தந்தை அவர்கள் தனது மறையுரையினை நிறைவு செய்ததும் மக்கள் அனைவரையும் இறைவனின் தாயான தூய மரியா என்று ஒருமித்து மூன்று முறைக் கூற அழைத்தார்.
திருத்தந்தையின் மறையுரையைத் தொடர்ந்து திருஅவை, அரசுத்தலைவர்கள், உடன் உள்ள அளவில் துன்புறுபவர்கள், புதிய தலைமுறையினர், பொதுநிலையினர், ஆகியோருக்காக மன்றாட்டுக்கள் இந்தி, ஆங்கிலம், இந்தோனேசியம், ஜெர்மானியம், சீனம் ஆகிய மொழிகளில் எடுத்துரைக்கப்பட்டன. காணிக்கைப்பவனி
தொடர்ந்த திருநற்கருணை வழிபாட்டினை திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் வழிநடத்தினார். திருப்பலியின் நிறைவில் அனைவருக்கும் தனது சிறப்பு ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்னை மரியா பாடலுடன் திருப்பலி நிறைவு பெற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்