கிறிஸ்தவர்கள் இல்லாத ஈராக்கை நாம் எண்ணிப்பார்க்க முடியாது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஜெர்மன் பத்திரிகையாளரும் இறையியலாளருமான மத்தியாஸ் கோப் (Matthias Kopp) அவர்கள் எழுதியுள்ள 'ஈராக்கில் கிறிஸ்தவப் பாரம்பரியம்' (The Christian Heritage in Iraq), என்ற நூலிற்கு வழங்கியுள்ள அணிந்துரை ஒன்றில், “கிறிஸ்தவர்கள் இல்லாத ஈராக்கை நாம் எண்ணிப்பார்க்க பார்க்க முடியாது” என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த 2021-ஆம் ஆண்டு, ஈராக் கிறிஸ்தவர்களுடனான தனது ஒன்றிப்பை வெளிப்படுத்தவும், மதங்களுக்கு இடையேயான உரையாடலை மேம்படுத்தவும் சவால்களை மீறி, முதல்முறையாக அந்நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதையும் தனது அணிந்துரையில் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை.
இந்தத் திருத்தூதுப் பயணத்தின்போது, ஈராக்கின் செயல் திறனை, குறிப்பாக, அதன் மக்களிடம் வலியுறுத்திக் கூறியதைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அப்போது ஈராக் ஷியாக்களின் ஆன்மிகத் தலைவரான பெரிய அயதுல்லா அலி அல்-சிஸ்தானியுடன் தான் மேற்கொண்ட சந்திப்பை மத வன்முறைக்கு எதிரான செய்தியாகவும் இவ்வணிந்துரையில் உயர்த்திக் காட்டியுள்ளார் திருத்தந்தை.
மேலும் ஈராக்கில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் வரலாற்று சகவாழ்வை (கூடிவாழ்தல்) நினைவு கூர்ந்துள்ள திருத்தந்தை, குடியேற்றம் மற்றும் அரசியல் நிச்சயமற்ற நிலையில் கிறிஸ்தவப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அதில் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்
ஈராக் கிறிஸ்தவ வரலாற்றில் மத்தியாஸ் கோப்பின் பணியைப் பாராட்டியுள்ள திருத்தந்தை, கிறித்தவச் சமூகம் இல்லாமல் ஈராக்கின் அடையாளம் முழுமையடையாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இறுதியாக, ஈராக்கில் அமைதியான சகவாழ்வுக்கான (கூடிவாழ்தலுக்கான) நம்பிக்கையை வெளிப்படுத்தி தனது அணிந்துரையை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்