ஏழைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்ந்திடுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் தங்கள் பணிகளில் ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் திருஅவையின் இரக்கம்மிகு கதவுகளை அவர்களுக்கு அகலமாகத் திறக்க வேண்டும் எனவும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்திய இலத்தீன் வழிபாட்டுக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) 36-வது ஆண்டு நிறையமர்வு கூட்டத்தை முன்னிட்டு, ஜனவரி 28, இச்செவ்வாய் அன்று, அதன் ஆயர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
இந்தியத் தலத்திருஅவைகள், ஒன்றிணைந்த பயணத்தின் (synodal) பலன்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பதைக் கண்டறியவும், அதிகமான மக்கள் அவர்களின் இறையழைத்தலால் ஊக்கமளிக்கப்பட்டு மறைத்தூதுப் பணியின் சீடர்களாக மாறவும், இந்தக் கலந்துரையாடல்கள் அவர்களுக்கு உதவும் என்றும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
இந்தியத் தலத்திருஅவை, நம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டும் எனவும், தேவையில் இருப்போரை வரவேற்று, சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளிக்க வேண்டும் எனவும் இந்தச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
"மறைத்தூதுப் பணிக்காக ஒன்றிணைந்த பயணத்தின் பாதைகளைத் தெளிந்து தேர்வு செய்தல்" என்ற மையப்பொருளில் நிகழும் இந்த ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில், இந்தியாவிலுள்ள அனைத்து இலத்தியின் வழிபாட்டுக் கத்தோலிக்க மறைமாவட்டங்களிலிருந்தும் 204 ஆயர்கள் பங்கேற்கின்றனர்.
ஜனவரி 28-ஆம் தேதி முதல் பிப்ரவரி 4-ஆம் தேதி வரை, ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள புனித சவேரியார் மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்