நமது எதிர்நோக்கு அன்பிலிருந்து பிறந்தது மற்றும் அன்பில் நிறுவப்பட்டது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நமது எதிர்நோக்கு அன்பிலிருந்து பிறந்தது மற்றும் அன்பில் நிறுவப்பட்டது என்றும், மனித பாவத்தால் ஏற்படும் அழிவுகளுக்கு மத்தியிலும், அன்பின் புதிய நாகரிகத்தை உருவாக்க இந்த அன்பு நம்மை அழைக்கிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜனவரி 29, புதன்கிழமை இன்று, கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் "உலகின் சமநிலைக்காக" என்ற கருப்பொருளில் இடம்பெற்று வரும் ஆறாவது அனைத்துலக மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை, அன்பால் உருவாக்கப்படும் புதிய நாகரிகம் நன்மையையும் அழகையும் மறுகட்டமைக்க நமக்கு உதவுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தியில், வன்முறை மற்றும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீடித்த அமைதிக்கான பாதைகளாக உரையாடல் மற்றும் தூதரக உறவுகளை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சமூக உள்ளடக்கத்தின் (social inclusion) முக்கியத்துவத்தை தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, ஏழைகள், நோயாளர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களின் மனித மாண்பிற்காகத் தனது ஆதரவை வழங்கியுள்ளதுடன், மனிதகுலத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்க நிறுவனங்கள் மற்றும் சமூகம் ஒன்றிணைந்து செயல்படவும் ஊக்குவித்துள்ளார்.
தனது செய்தியில், கிறிஸ்தவப் படிப்பினைகள் குறித்து எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, அன்பு மற்றும் ஒன்றிப்பின் செயல்கள் தனிநபர்களையும் சமூகத்தையும் பலப்படுத்துகின்றன என்பதை இறைநம்பிக்கை உள்ளோருக்கும் இல்லாதோருக்கும் நினைவூட்டியுள்ளார்.
வளங்கள் சமமாகப் பகிரப்பட்டு, தாராள மனப்பான்மை மனிதத் தொடர்புகளுக்கு வழிகாட்டும் ஓர் உலகை நோக்கி நகரவேண்டியதன் அவசியம் குறித்தும் தனது செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை
இறுதியாக, நீதி, உடன்பிறந்த உறவு மற்றும் நம்பிக்கைக்கைகாகப் பணியாற்ற வேண்டும் எனவும், இது ஒவ்வொருவரும் எதிர்காலத்தை எதிர்நோக்குடனும் மாண்புடனும் பார்க்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
ஜனவரி 28, இச்செவ்வாய்க்கிழமையன்று, தொடங்கி நடைபெற்று வரும் இம்மாநாடு வரும் 31-ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று நிறைவடைகிறது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்