முடங்கிவிடாமல், இயேசுவின் விண்மீனை நோக்கி நடைபோடுவோம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இம்மாதம் 7ஆம் தேதியன்று கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டங்களை சிறப்பிக்கும் கீழை திருஅவைகளுக்கு தன் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செவ்வாய்க்கிழமையன்று கிறிஸ்து பிறப்பைச் சிறப்பிக்கும் அனைத்து கீழை ரீதி கிறிஸ்தவ சபைகளுக்கும் வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தை, இன்றைய உலகில் தொடர்ந்துகொண்டிருக்கும் மோதல்களால் துயருறும் மக்களுக்காக சிறப்பான விதத்தில் தான் செபிப்பதாகவும் தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.
அமைதியின் இளவரசராம் இயேசு கிறிஸ்து அனைவருக்கும் அமைதியையும் சாந்தத்தையும் வழங்குவாராக என மேலும் அதில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இதே நாளில் திருத்தந்தை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் குறுஞ்செய்தியில், வாழ்வின் கவலைகளுக்குள் முடங்கிவிடாமல், இயேசுவின் விண்மீனை நோக்கி நடைபோடுவோம் என அழைப்புவிடுத்துள்ளார்.
இருள் நிறைந்த இரவிலும் ஒரு விண்மீன் ஒளிர்கிறது. அது, பலவீனமான மனிதகுலத்தின் மீது அக்கறையுடன் வரும் இயேசுவின் விண்மீன் என கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இவ்வுலக வாழ்வில் துயர்களுக்குள் நம்மை முடக்கிவிடாமல் இயேசுவை நோக்கி நடைபோடுவோம் என செவ்வாய்க்கிழமையின் தன் இரண்டாவது டுவிட்டரில் விண்ணப்பித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்