உரோம் ஜெமெல்லி மருத்துவமனை உரோம் ஜெமெல்லி மருத்துவமனை   (ANSA)

கலை என்னும் உலகளாவிய மொழி – திருத்தந்தை பிரான்சிஸ்

கலை மற்றும் கலாச்சாரங்கள் போரின் அழுகையை அமைதிப்படுத்த உதவுகின்றன - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் - வத்திக்கான்

உலகளாவிய மொழியாகிய கலையின் முக்கியத்துவத்தை நினைவுகூரவும், அதன் அழகை மக்களிடத்தில் பரவச் செய்து, அவர்களை ஒன்றிணைத்து, உலகிற்கு நல்லிணக்கத்தைக் கொண்டு வரவும், கலைஞர்கள் மற்றும் கலாச்சார உலகத்தின் விழா சிறப்பிக்கப்படுகின்றது என்று தனது மூவேளை செப உரைக் கருத்தில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 16, ஞாயிற்றுக்கிழமை, வழக்கமாக வத்திக்கானில் மூவேளை செப உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் தனது கருத்துக்களை திருப்பீடச் செய்தியகத்திற்கு வழங்கியுள்ளார்.

அச்செய்தியில், பிப்ரவரி 15, சனிக்கிழமை முதல் வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கலைஞர்கள் மற்றும் கலாச்சார உலகத்தின் விழாவை முன்னிட்டு,  இவ்விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், கலை மற்றும் கலாச்சாரங்கள், போரின் அழுகையை அமைதிப்படுத்த உதவுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விழாவின் போது கலைஞர்கள் அனைவருடனும் இருக்க வேண்டும் என்று தான் விரும்பியதாகவும், மூச்சுக்குழல் அழற்சி நோய் சிகிச்சைக்காக ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் தன்னால் இவ்விழாவில் பங்கேற்க இயலவில்லை என்றும் அச்செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

போரினால் துன்புறும் மக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து செபிப்பதை தனது வழக்கமாகக் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்புறும் உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், மத்திய கிழக்கு, மியான்மர், கீவ், சூடான் பகுதியில் வாழும் மக்கள் அனைவருக்கும் அமைதி கிடைக்க, அமைதிக்காக தொடர்ந்து செபிப்போம் என்று அழைப்புவிடுத்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் மேல் அன்பு கொண்டு, உடல்நலனுக்காக செபிக்கும் அனைவருடனும் தனது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்தி நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், ஜெமெல்லி மருத்துவமனையில் தன்னை கவனமுடன் பாதுகாக்கும் மருத்துவர்கள், நலவாழ்வுப் பணியாளர்கள் அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்து, அவர்களது மதிப்புமிக்க மற்றும் மிகவும் கடினமான பணிக்காக செபத்தின் வழியாக அவர்களுக்கு உடனிருப்பை அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

அருள் நிறைந்த மரியாவிடம் நம்மை ஒப்படைத்து, அவரைப் போலவே நாமும், உலகைக் காக்கும் அழகின் படைப்பாளர்களாகவும், பாடகர்களாகவும் இருக்க அருள் வேண்டுவோம் என்று கூறி தனது கருத்துக்களை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 பிப்ரவரி 2025, 12:45

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >