திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப் பொறுப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டதன் 12-ஆம் ஆண்டு நிறைவு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மார்ச் 13, வியாழக்கிழமை நாளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் தலைமைப் பொறுப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டதன் பன்னிரெண்டாம் ஆண்டை நிறைவு செய்யும் வேளை, அவரைக் குறித்துத் தனது சிந்தனைகளைக் கட்டுரை ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் திருப்பீடச் சமூகத்தொடர்புத் துறையின் செய்திப் பிரிவுத் தலைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி.
மார்ச் 12, புதன்கிழமை இன்று, இந்தக் கட்டுரையை வழங்கியுள்ள தொர்னியெல்லி அவர்கள், திருத்தந்தை ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தற்போதைய தனித்துவமான தருணம் குறித்தும் கோடிட்டுக்காட்டியுள்ளார்.
திருத்தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வரும் இவ்வேளையில், பல நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட விரிவான திருத்தூதுப் பயணங்கள் மற்றும் முக்கியத் திருஅவை நிகழ்வுகளின் முடிவைத் தொடர்ந்து, இந்த ஆண்டு நிறைவு நாள் ஒரு மாற்றத்தின் நேரத்தில் (time of transition) வருகிறது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் தொர்னியெல்லி.
தனது தலைமைத்துவத்தின் பதவிக் காலம் முழுவதும் அடிக்கடி தனக்காக இறைவேண்டல் செய்யுமாறு வேண்டுகோள்விடுத்து வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்போது உலகம் முழுவதிலுமிருந்தும் எண்ணற்ற மக்களுடைய இறைவேண்டல்களின் ஆதரவை உணர்கிறார் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் தொர்னியெல்லி.
குறிப்பாக, இந்தக் கட்டுரையில் திருஅவையினுடைய பணியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளதுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடவுளையும் அவரது அருளையும் சார்ந்திருப்பதில் கவனம் செலுத்தும் தாழ்ச்சியும் பணிவும் நிறைந்த ஒரு பணியாளர் என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளார் தொர்னியெல்லி.
அமைதி, உரையாடல் மற்றும் இரக்கத்திற்கான திருத்தந்தையின் அழைப்பை இந்தக் கட்டுரையில் பிரதிபலித்துள்ள தொர்னியெல்லி அவர்கள், குறிப்பாக துயர்நிறைந்த காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சார்பாக அவர் எழுப்பிய ஆதரவுக் குரலின் முக்கியத்துவத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
ஹோர்கே மாரியோ பெர்கோலியோ என்ற இயற்பெயர் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 13-ஆம் நாள் கத்தோலிக்கத் திருஅவையின் 266-வது திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் வத்திக்கான் நகரின் தலைவரும் ஆவார். அர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்த இவர் அதன் புவேனோஸ் ஐரேஸ் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றியவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்