கடவுளிடம் நாம் திரும்பிச் செல்ல நமக்காகக் காத்திருக்கும் கடவுள்
மெரினா ராஜ் - வத்திக்கான்
காய்க்காத அத்திமர உவமையில் வரும் பொறுமையுள்ள தோட்டத் தொழிலாளி கடவுளையும், அவர் பண்படுத்த விரும்பும் மண் நமது வாழ்வையும் அடையாளப்படுத்துகின்றது என்றும், கடவுளிடம் நாம் திரும்பி வருவதற்காக நம்பிக்கையுடன் அவர் எப்போதும் காத்திருக்கின்றார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை மூவேளை செப உரையில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காய்க்காத அத்திமர உவமை பற்றிய தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு நற்செய்தி வாசகம் குறித்தக் கருத்துக்களை எழுத்துப்படிவமாக திருப்பயணிகளுக்கு வழங்கியுள்ளார்.
இன்றைய நற்செய்தியில் நாம் காணும் உவமை கடவுளின் பொறுமையைப் பற்றி நமக்கு எடுத்துரைக்கின்றது என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், நம் வாழ்க்கையை மனமாற்றத்தின் காலமாக மாற்றும்படி இந்நற்செய்தி வாசகம் நம்மைத் தூண்டுகிறது என்றும், அத்திமரத்தை வெட்ட விரும்பாத தோட்டத் தொழிலாளி எதிர்காலத்தில் பலன் தருவதற்காக சுற்றிலும் கொத்தி எருபோட விரும்புகின்றார் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
நீண்ட நாள்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளையில் கடவுளின் பொறுமையைத் தான் அளவுக்கதிகமாக அனுபவிக்க முடிந்தது என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், மருத்துவர்கள் மற்றும் நலவாழ்வுப் பணியாளர்களின் இடைவிடாத பணியினை அக்கறை, பாதுகாப்பு, எதிர்நோக்கு போன்றவற்றால் நோயாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடம் வெளிப்படுத்துவதன் வழியாகக் காண முடிகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
உறுதியுள்ள மற்றும் நம்பிக்கையுள்ள பொறுமையானது, ஒருபோதும் குறைவுபடாத கிறிஸ்துவின் அன்பில் நிலையாய் உள்ளது என்றும், நமது வாழ்வின் எல்லாச் சூழல்களிலும், குறிப்பாக கடினமான மற்றும் துயரமான நேரங்களில் அதனைக் கையாள்வதற்கு பொறுமை மிக அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
காசா பகுதியில் இஸ்ரயேலர்கள் மீண்டும் கடுமையான தாக்குதல்களை நடத்தி பல உயிரிழப்புக்களையும் காயங்களையும் ஏற்படுத்தியது குறித்து தான் மிகவும் வருந்துவதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், ஆயுத மோதல்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும், பிணையக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு போர் நிறுத்தம் ஏற்படும் வகையில், உரையாடல் வழியை மீண்டும் மேற்கொள்ள துணிவு கொண்டிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
போர்ச்சூழல் உள்ள பகுதிகளில் மனிதாபிமான உதவி தேவைப்படும் நிலை மீண்டும் மோசமடையத் தொடங்கியுள்ளதால் அங்குள்ள மக்கள், போரிடும் கட்சிகள் மற்றும் பன்னாட்டு சமூகங்களின் ஆதரவை நாடுவதாக எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
மேலும் அர்மீனியா அஜர்பைஜான் ஆகிய இரண்டும் அமைதிக்கான ஒப்பந்தத்தின் இறுதி தீர்மானத்திற்கு உடன்பட்டது குறித்து தான் மகிழ்வடைவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், விரைவில் கையெழுத்திடப்பட இருக்கும் இவ்வொப்பந்தமானது தெற்கு கௌகாசுசில் நீடித்த நிலையான அமைதியை நிலைநாட்ட உதவும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் தனக்காக தொடர்ந்து செபிக்கும் அனைவருக்கும் “மிக்க நன்றி, உங்களுக்காகவும் நான் செபிக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், போர்கள் முடிவுக்கு வரவும், குறிப்பாக உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், லெபனோன், மியான்மார், சூடான், காங்கோ ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளில் அமைதி நிலவவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கன்னி மரியா நம்மைப் பாதுகாத்து, உயிர்ப்பின் பயணத்தில் நம் உடன்நடப்பாராக என்று குறிப்பிட்டு தனது மூவேளை செப உரையினை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்