திருத்தந்தையின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, பகலில் வழங்கப்படும் அதிக அளவிலான ஆக்ஸிஜனேற்ற சிகிச்சையும், இரவு ஓய்வின் போது வழங்கப்படும் செயற்கை முறை ஆக்ஸிஜன் வழங்கல் சிகிச்சையும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
மார்ச் 19, புதன்கிழமை மாலை, செய்தியாளர்களுக்கு வழங்கிய அறிக்கையில் இத்தகவலை தெரிவித்துள்ள திருப்பீடச் செய்தித் தொடர்பகம், திருத்தந்தையின் மருத்துவ நிலைகுறித்த செய்திகளையும் கூடுதலாகக் கொடுத்துள்ளது.
சுவாச உடலியக்க மருத்துவ சிகிச்சை முறை (respiratory physiotherapy) திருத்தந்தையின் உடல்நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றத்தைக் காட்டுகிறது என்றும், மார்ச் 19, இப்புதன்கிழமை திருஅவை புனித வளனாரின் பெருவிழாவைச் சிறப்பித்த வேளை, அன்று காலையில் நிகழ்ந்த கூட்டுத் திருப்பலியில் அவர் கலந்துகொண்டார் என்றும் உரைக்கிறது அதன் அறிக்கை.
திருத்தந்தையின் மருத்துவர்கள் அவரது நுரையீரல் தொற்றுகள் கட்டுக்குள் இருப்பதாகவும், அவரது மருத்துவப் பரிசோதனைகளின் அறிக்கைகள் நல்ல முன்னேற்றத்தைக் காட்டுவதாகவும் உள்ளன என்றும், அவர் தொடர்ந்து காய்ச்சல் இல்லாமல் இருக்கிறார் என்றும் தெரிவித்ததாகவும் கூறியுள்ளது அதன் அறிக்கை.
திருத்தந்தை தொடர்ந்து சிகிச்சை பெற்று, இறைவேண்டல், ஓய்வு மற்றும் சிறு பணிகளை ஆற்றுவதன் வழி அந்நாளை செலவிட்டதாகத் தெரிவிக்கும் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை, புனித வாரத்தில் இடம்பெறும் வழிபாட்டு நிகழ்வுகளுக்கு யார் தலைமை தாங்குவது என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
திருத்தந்தையின் உடல்நிலை சீராக இருப்பதால், அவரது உடல்நிலை குறித்த அறிவிப்புக்கள் அடுத்த வாரத்திற்கு முன்னதாகவே எதிர்பார்க்கப்படுகிறது என்றும், திருப்பீடச் செய்தித் தொடர்பக அலுவலகம், வெள்ளி மற்றும் திங்கள்கிழமைகளில் பத்திரிகையாளர்களுக்கு சில பொதுவான தகவல்களை வழங்கும் என்றும் உரைத்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்