அத்துமீறல் தடுப்பு கொள்கையே நாம் குழந்தைக்கு வழங்கும் வாக்குறுதி
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
எங்கெல்லாம் எப்போதெல்லாம் ஒரு குழந்தை அல்லது பலவீனமான ஒருவர் பாதுகாப்பை உணர நாம் உதவுகிறோமோ அப்போதெல்லாம் நாம் இறைவனுக்குப் பணியாற்றி அவரைக் கௌரவப்படுத்துகிறோம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இளம்வயதினரின் பாதுகாப்பிற்கான திருப்பீட அவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் பங்குபெறுவோருக்கு அனுப்பியச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு குழந்தை பாதுகாப்பை உணரும் நிலையை நாம் உருவாக்கும்போது, அது தலத்திருஅவைக்கும் துறவுசபைகளுக்கும் ஆக்சிஜனாகச் செயல்படுகிறது என மேலும் அதில் தெரிவித்துள்ளார்.
அத்துமீறல் நடவடிக்கைகளை நாம் தடுப்பதன் வழி, நற்செய்திக்கு விசுவாசமாக இருக்கும் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பும் அடிக்கல்லை நாட்டுகிறோம் எனவும் தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதுகாப்பை ஊக்குவித்தல், கல்வி வழியான பயிற்சி உருவாக்கம், தடுப்பதற்கான வழிமுறைகள், மாண்பை மீண்டும் கொண்டுவரும் வகையில் செவிமடுத்தல் என்பவைகளின் அவசியத்தையும் எடுத்தியம்பியுள்ளார்.
அத்துமீறல்களை தடுப்பதற்கான கொள்கைகளை நாம் வகுக்கும்போது ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு வாக்குறுதியை வழங்கி, அவர்கள் சுற்றுச்சூழலில் பாதுகாப்புடன் வாழ்வதற்கான உறுதியை வழங்குகிறோம் என திருத்தந்தையின் செய்தி மேலும் கூறுகிறது.
திருப்பீடத் தலைமையகத்தின் ஒவ்வொரு துறையிலும் இணைந்துப் பணியாற்றுவது, பாதிக்கப்பட்டோரின் காயங்களுக்கு மருந்திட்டு குணமாக்க முன்வருவது, திருஅவைக்கு வெளியேயிருக்கும் பொதுநிலைக் குழுக்களுடன், சமூக-அரசியல் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றுதல் என்ற மூன்று அர்ப்பணங்கள் குறித்தும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
இளம்வயதினரின் பாதுகாப்பிற்கான திருப்பீட அவை துவக்கப்பட்டதிலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக அது ஆற்றிவரும் சிறப்புப் பணிகளுக்கும் தன் நன்றியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்