ஒன்றிணைந்து வளரச் செய்யும் அன்பு – திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் – வத்திக்கான்
அன்பு நம்மை ஒன்றிணைக்கின்றது மற்றும், ஒன்றித்து வளரச் செய்கின்றது என்றும், பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும் அன்பு ஒன்று மட்டுமே திருத்தூதர் பேதுருவின் கல்லறை முன் நம்மை ஒன்றாக இணைக்கின்றது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 22, சனிக்கிழமை இன்று, யூபிலி ஆண்டை முன்னிட்டு திருப்பயணிகளாக உரோமை நகர் வந்திருக்கும் நேபிள்ஸ் உயர் மறைமாவட்டம் மற்றும் பிற மறைமாவட்டங்களைச் சார்ந்தோருக்கு வழங்கியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் வளாகத்தில் நடைபெற்ற திருப்பலியின்போது, திருத்தந்தையின் செய்தியினை இத்தாலியின் நேபிள்ஸ் நகர் பேராயர் Domenico Battaglia அவர்கள் இறைமக்களுக்கு எடுத்துரைத்தார்.
“இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்” என்ற இயேசுவின் அழைப்பினை ஏற்று திருத்தந்தைக்கு இறைமக்கள் அளித்து வரும் உடனிருப்பு மற்றும் நெருக்கத்திற்காக நன்றி தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மக்களின் ஆன்மிக உடனிருப்பை அதிகமாக உணர்ந்து வருவதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
செபத்தின் வழியாகத் தனக்கு உடனிருப்பை வழங்கி வரும் அனைவருக்கும் நன்றி கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், தன்னால் அம்மக்களை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் தன்னோடும், ஒரே திருஅவையாக கிறிஸ்து இயேசுவிலும், ஒருவரோடொருவர் ஒன்றிணைக்கப்பட்டிருப்பது குறித்த மகிழ்வினைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பயணிகளாக வந்திருக்கும் அவர்கள் அனைவருக்காகவும் செபித்து, தனது ஆசீரை வழங்குவதாக மொழிந்துள்ள திருத்தந்தை அவர்கள், தனக்காகத் தொடர்ந்து செபிக்குமாறு கேட்டுக்கொண்டு தனது செய்தியினை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்