ஓய்விலும் செபத்திலும் தனது நாளை செலவிட்ட திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
கடந்த பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை முதல் உரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் மூச்சுக்குழல் அழற்சி நோய்க்கென சிகிச்சை பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 7, வெள்ளி முழுவதையும் ஓய்விலும் செபத்திலும் செலவிட்டதாக திருப்பீடத் தகவல் தொடர்பகம் அறிவித்துள்ளது.
மார்ச் 7, வெள்ளிக்கிழமை மருத்துவமனையின் 10ஆவது தளத்தில் இருக்கும் சிற்றாலயத்தில் ஏறக்குறைய 20 நிமிடங்கள் தனி செபத்திற்கு நேரம் ஒதுக்கிய திருத்தந்தை அவர்கள், அதன்பின் சிறிதளவு அலுவல்களையும் ஆற்றத் தொடங்கியதாகவும் தகவல் தெரிவித்துள்ளது திருப்பீடம்.
திருத்தந்தையின் மருத்துவ சிகிச்சை முடிவுகள் சீரான நிலையை எடுத்துரைப்பதாகவும், தொடர் மருத்துவக் கண்காணிப்பில் திருத்தந்தை இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் கருதுவதாகவும் அவ்வறிக்கை எடுத்துரைத்துள்ளது.
சுவாச உடலியக்க மருத்துவ சிகிச்சை முறைகளைத் திருத்தந்தை அவர்கள் தொடர்ந்து பெறுகின்றார் என்றும், மார்ச் 7, வெள்ளிக்கிழமை பகலில் அதிகளவு செயற்கை ஆக்சிஜன் வழங்கும் சிகிச்சைமுறையையும் இரவில் மூக்கு துவாரத்தின் வழியே செலுத்தப்படும் ஆக்சிஜன் சிகிச்சை முறையையும் பெற்றுக்கொண்டார் என்றும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை அறிக்கை
மார்ச் 8, சனிக்கிழமை காலையில் வெளியிட்ட திருப்பீடத் தகவல் தொடர்புத்துறையின் அறிக்கையானது, திருத்தந்தை அவர்கள் இரவு முழுவதும் நன்றாக நித்திரையில் ஆழ்ந்ததாகவும், காலையில் ஏறக்குறைய 8 மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்து ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்