சுவாசிப்பதில் எவ்வித சிரமத்தையும் திருத்தந்தை எதிர்நோக்கவில்லை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருத்தந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கான மருத்துவச் சிகிச்சை முறைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த சில நாட்களோடு ஒப்பிடும்போது, வியாழக்கிழமை முழுவதும் அவர் உடல் நிலை சீராக இருந்ததாகக் கூறும் இவ்வறிக்கை, அவர் சுவாசிப்பதில் எவ்வித சிரமத்தையும் எதிர்நோக்கவில்லை எனவும் தெரிவிக்கிறது.
பிப்ரவரி 14ஆம் தேதியிலிருந்து உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் மூச்சுக்குழல் அழற்சி நோய்க்கென சிகிச்சைப் பெற்றுவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவருக்கு வழங்கப்படும் அனைத்து சிகிச்சை முறைகளுக்கும் நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், அந்த சிகிச்சை முறைகள் நல்ல பலன் தந்து கொண்டிருப்பதாகவும் திருப்பீடத் தகவல் தொடர்புத்துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.
இரத்த இயக்கவியல் நன்றாக இருப்பதாகவும், அவரின் இரத்த பரிசோதனை முடிவுகள் சீரான நிலையைக் காண்பிப்பதாகவும், அவருக்கு வியாழன் முழுவதும் காய்ச்சல் அறிகுறி எதுவும் இல்லை எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் உடல் நிலை சீராக இருந்து வருவதால், வெள்ளிக்கிழமை மாலை அவரின் உடல் நிலை குறித்த எந்த அறிக்கையும் வெளியிடப்படாது எனவும், அடுத்த அறிக்கை சனிக்கிழமையே வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை மருத்துவமனையில் சிகிச்சைப் பெறத் துவங்கியதிலிருந்து ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் அவர் உடல் நிலை குறித்த அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது திருப்பீடத் தகவல் துறை.
வெள்ளி காலை அறிக்கை
வெள்ளி காலையில் வெளியிட்ட திருப்பீடத் தகவல் தொடர்புத்துறையின் அறிக்கை, அவர் இரவு முழுவதும் நன்றாக நித்திரையில் ஆழ்ந்ததாகவும், காலையில் ஏறக்குறைய 8 மணிக்கு படுக்கையிலிருந்து எழுந்து ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்