இன்னும் சில நாட்கள் திருத்தந்தை மருத்துவமனையில் இருப்பார்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருத்தந்தையின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டு வருவதாகவும், இருப்பினும் இன்னும் சில காலம் அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் திருப்பீடத் தகவல்துறை அறிவித்துள்ளது.
உடல்நிலை தேறிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் திருப்பீட உயர் அதிகாரிகளுக்கென நடத்தப்படும் தவக்கால ஆண்டுத் தியானத்தில் காணொளி வழியாக திங்களன்று பங்குபெற்றார்.
திங்கள் இரவு எவ்வித இடையீறுமின்றி அவர் உறங்கி ஓய்வெடுத்ததாகக் கூறும் திருபீடத் தகவல் தொடர்புத் துறையின் அறிக்கை, அவரின் இரத்த மற்றும் ஏனைய மருத்துவ பரிசோதனைகள் நல்ல முடிவுகளை தந்துள்ளதாகவும், மருத்துவ சிகிச்சை முறைகளுக்கு அவர் நல்ல ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவிக்கிறது.
திருத்தந்தையின் உடல்நலம் குறிப்பிடத்தகும் வகையில் முன்னேறி வருவதால், அவருக்கு வழங்கப்பட்டுள்ள தீவிரச் சிகிச்சை கண்காணிப்பு வளையம் அகற்றப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இன்னும் சில நாட்கள் அவர் மருத்துமனைச் சூழலில் இருந்து சிகிச்சைப் பெறுவது நலம் என மருத்துவர்கள் அறிவுறுத்துவதாகவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வியாழன் காலையில் தவக்காலத் தியானத்தில் காணொளி வழி கலந்துகொண்டபின், திருநற்கருணையைப் பெற்றதாகவும், மருத்துவமனையில் அவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள தனி கோவிலில் சிறிது நேரம் செபித்ததாகவும் திருப்பீடத் தகவல் தொடர்புத் துறையின் அறிக்கைத் தெரிவிக்கிறது.
வியாழன் முழுவதும் அவர் ஜெபத்திலும் ஓய்விலும் செலவிட்டதாக அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்