இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் – திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார், துன்ப காலங்களில் தனது அன்பின் ஒளிக்கதிரைப் பிரதிபலிக்கும் மக்களை நம் அருகில் வைப்பார் என்றும், நமது உடல் பலவீனமாக இருக்கலாம், ஆனால், அன்பு செய்தல், நம்மையேக் கொடையாக அளித்தல், ஒருவர் மற்றவருக்காக இருத்தல், நம்பிக்கையோடிருத்தல், எதிர்நோக்கின் ஒளி நிறைந்த அடையாளமாக இருத்தல் போன்றவற்றிலிருந்து எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை மூவேளை செப உரையில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தவக்காலத்தின் இரண்டாம் வார நற்செய்தி வாசகமான இயேசுவின் உருமாற்றம் குறித்தக் கருத்துக்களையும் பகிர்ந்துள்ளார்.
மருத்துவமனையில் மூச்சுக்குழாய் அழற்சி நோய்க்கென சிகிச்சை பெற்று வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த வாரங்களைப் போலவே இவ்வாரமும் தனது மூவேளை செப உரைக்கருத்துகளை எழுத்து வடிவில் திருப்பீடத் தகவல் தொடர்பகத்திற்கு அளித்துள்ளார்.
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு, இயேசுவின் உருமாற்றம் குறித்து எடுத்துரைக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், செபத்தில் மூழ்கி, இறை ஒளியால் நிறைந்து, உருமாற்றம் அடைந்த இயேசு, தனது செயல்களின் வழியாக பேதுரு, யாக்கோபு, யோவான் என்னும் சீடர்களுக்குத் தனது எல்லையற்ற அன்பின் ஒளியைக் காட்டுகின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.
உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் உடல்நலமற்று இருக்கும் அனைத்து நோயாளர்களுடன் தனது நெருக்கத்தை ஒன்றிணைப்பதாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், மருத்துவமனையில் அன்பு, நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் வெளிச்சங்கள் சுடர் விடுவதாக தெரிவித்துள்ளார்.
உடல் நோயால் பலவீனமடைந்த நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையின் அறைகள், நடைக்கூடம் (corridor), வெளிநோயாளர் பிரிவு என கவனிப்புடன் கூடிய தாழ்ச்சியுள்ள, எளிய பணிகள் ஆற்றப்படும் எல்லா இடங்களிலும், இறைவனின் ஒளிக்கதிர்கள் சுடர் விடுகின்றன என்றும், இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார், துன்ப காலங்களில் தனது அன்பின் ஒளிக்கதிரைப் பிரதிபலிக்கும் மக்களை நம் அருகில் வைப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
தனக்காக செபிக்கும் மக்கள், மருத்துவமனையில் தனக்கு அர்ப்பண மனநிலையுடன் உதவுபவர்கள் ஆகிய அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல சிறார்கள் தனக்காக செபிப்பதை அறிவதாகவும், அவர்களில் சிலர் ஜெமெல்லி மருத்துவனைக்கு, உடனிருப்பின் அடையாளமாக வந்ததாகவும் கூறி அவர்களுக்கும் தனது நன்றியினைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அன்பான குழந்தைகளே உங்களுக்கு நன்றி, திருத்தந்தை உங்களை மிகவும் அன்பு செய்கின்றார். உங்களை சந்திக்க எப்போதும் காத்துக்கொண்டிருக்கின்றார் என்று தனது கருத்துக்களை வெளியிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், அமைதிக்காக செபிக்க மறக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், லெபனோன், மியான்மார், சூடான், காங்கோ ஜனநாயகக் குடியரசு நாடுகள், போரினால் காயமடைந்த நாடுகள் போன்றவற்றிற்காக செபிப்போம், அமைதிக்காகத் தொடர்ந்து செபிப்போம் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், திருஅவைக்காகத் தொடர்ந்து செபிப்போம் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற உலக ஆயர் மாமன்றத்தில் தெளிந்து தேர்வுசெய்யப்பட்ட உறுதியான தேர்வுகளை நடைமுறைப்படுத்துவதற்காக வருகின்ற மூன்று ஆண்டுகளில் நடைபெற உள்ள செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்துள்ள திருத்தந்தை அவர்கள், தலத்திருஅவைகள் இத்தகைய நோக்கத்தோடு பணியாற்றுவதற்கு வழியமைத்துள்ள ஆயர் மாமன்ற பொதுச்செயலகத்தின் பணிக்குத் தன் நன்றியினைத் தெரிவித்துள்ளார்
இறுதியாக, கன்னி மரியா நம்மைப் பாதுகாத்து, அவரைப் போலவே, கிறிஸ்துவின் ஒளியையும் அமைதியையும் தாங்குபவர்களாக நாம் இருக்க நமக்கு உதவுவாராக என்று குறிப்பிட்டுத் தனது மூவேளை செப உரைக் கருத்துக்களை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்