"நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்"-திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அச்சங்களை எதிர்கொள்ள நம் உள்ளத்தின் மனப்பாங்குதான் நம்மை ஊக்குவிக்கிறது என்றும், நம்மை அச்சுறுத்தும் ஒன்றை எதிர்கொள்வதன் வழியாக மட்டுமே நாம் விடுதலைபெற முடியும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோமை ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவரும் நிலையில், தனது புதன்கிழமை மறைக்கல்வி உரையை எழுத்துப்படிவமாக வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
"இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு" என்ற தலைப்பில் தனது மறைக்கல்வி உரை சிந்தனைகளை வழங்கிவரும் திருத்தந்தை, இவ்வாரம் இயேசு நிக்கதேம் சந்திப்புக் குறித்த (காண்க யோவா 3:1-21) தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.
மற்ற நற்செய்திகளைப் போலவே, இந்தச் சந்திப்புகளும் ஞானத்தையும் எதிர்நோக்கையும் வழங்குகின்றன என்றும், இவை பெரும்பாலும் பிரச்சனைகளை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க உதவுகின்றன அல்லது வலியின் காலங்களில் ஆறுதல் அளிக்கின்றன என்ற விளக்கங்களுடன் தன் உரையைத் தொடர்ந்தார் திருத்தந்தை.
இரவில் இயேசுவைச் சந்திக்கும் நிக்கதோம் குறித்து எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இது அவரின் உள் இருளின் சந்தேகத்தைக் குறிக்கிறது என்று குறிப்பிட்டதுடன் யூதர்களிடையே சிறப்பான தகுதியும் செல்வாக்கும் கொண்டிருந்த அவர் தனது வாழ்க்கையில் ஏதோ ஒன்று குறையாக உள்ளது என்பதை உணர்ந்து, மாற்றத்தை விரும்புவதால் இயேசுவைத் தேடிவருகிறார் என்றும் விளக்கினார்.
இருப்பினும், நிக்கதேம் தனது சொந்த கருத்தியல் மற்றும் மெய்விளக்கியல்களில் (logic and categories) கவனம் செலுத்துவதால், இயேசு கூறவிரும்பிய செய்தியைப் புரிந்துகொள்ள அவர் சிரமப்படுகிறார் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
இயேசுவுக்கும் நிக்கதேமுக்குமான சந்திப்பு, வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் மாற்றம் அவசியம் என்பதை வலியுறுத்துகிறது என்றும், அதேவேளையில், மேலிருந்து வரும் (தூய ஆவியாரிடமிருந்து) புதிய பிறப்புக்கான சாத்தியத்தை இயேசு அவரிடம் எடுத்துக்காட்டுகிறார் என்றும் உரைத்த திருத்தந்தை, இந்தப் புதிய பிறப்பு ஒருவரை ஆன்மிக ரீதியாக மறுபிறப்பெடுக்க அனுமதிக்கிறது என்றும் மொழிந்தார்.
மேலும் மாற்றம் சாத்தியம் என்பதைக் காட்ட இயேசுவுக்கும் நிக்கதேமுக்குமான இந்தச் சந்திப்பு பயன்படுத்தப்படுகிறது என்றும், இறுதியில், இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்த பிறகு அடக்கம் செய்ய அவரது உடலைக் கேட்பவர்களில் நிக்கோதேமும் ஒருவராக இருப்பார் என்றும் கூறிய திருத்தந்தை, இது அவர் இருள்நிறைந்த வாழ்விலிருந்து ஒளிநிறைத்த வாழ்வுக்குக் கடந்து வந்துவிட்டார் என்பதைக் குறிக்கிறது என்றும் விளக்கமளித்தார்.
பாலைநிலத்தில் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசிய மக்கள் கொள்ளி வாய்ப் பாம்புகளால் கடிபட்டு மரணித்தபோது பெருமச்சமடைந்த அவர்கள் வெண்கலப் பாம்பால் உயிர்பெற்றதுபோல, மாற்றத்தை ஏற்றுக்கொள்ள அச்சத்தை எதிர்கொள்ள வேண்டிய துணிவைப் பெற இந்தச் சந்திப்பு உதவுகிறது என்பதையும் விளக்கிக் கூறினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்