மனமாற்றம், மன்னிப்பு என்னும் திருஅவையின் கரங்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
மனமாற்றம், மன்னிப்பு என்னும் இரண்டின் வழியாக நமது கண்களில் உள்ள கண்ணீரைக் கடவுள் துடைக்கின்றார் என்றும், அவைகள், பாவிகளை திருஅவை அணைக்கும் கரங்கள், இவ்வுலகப் பாதையில் நடக்க உதவும் கால்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 29, சனிக்கிழமை இறைஇரக்கத்தின் மறைப்பணியாளர்களுக்கான யூபிலியை முன்னிட்டு அருள்பணியாளர்களுக்கான திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் யூபிலி சிறப்புச் செய்தியினை, புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா அவர்கள் எடுத்துரைத்தார்.
எல்லையற்ற அன்பில் உயர்ந்தவரான கடவுள், நம் அனைவரையும் மனமாற்றத்திற்கு அழைக்கிறார், எப்போதும் தம்முடைய மன்னிப்பால் நம்மைப் புதுப்பிக்கிறார் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், உலக மீட்பராகிய இயேசு தமது தூய ஆவியாரின் வல்லமையால் அவரை நாம் பின்பற்றி நடப்பதற்கான வழியை நமக்குத் திறக்கின்றார் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
ஒப்புரவு அருளடையாளம் வழங்கும் மறைப்பணியாளர்களாகிய அருள்பணியாளர்கள் ஒவ்வொருவரும் செவிசாய்ப்பதில் கவனமுடனும், பிறரை வரவேற்பதற்கு தயார் மனநிலையுடனும், தங்களது வாழ்வைப் புதுப்பித்து கடவுளை நோக்கித் திரும்ப விரும்புவோருடன் உடன்செல்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
கடவுள் தமது இரக்கத்தால், நம்மை உள்ளார்ந்த விதமாக மாற்றுகிறார், நம் இதயங்களை மாற்றுகிறார் என்றும், கடவுளுடைய மன்னிப்பு என்பது எதிர்நோக்கின் அடித்தளம், அவர் நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை உலகிற்கு வெளிப்படுத்த கடவுள் மனிதராக பிறந்தார் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்