வாழ்க்கைக்கு பலம் அளிக்கும் கடவுளின் அன்பு
மெரினா ராஜ் – வத்திக்கான்
கடவுளின் அன்பானது ஓர் உயிருள்ள சுடரைப்போல, நமது வாழ்க்கைப் பயணத்திற்கு பலமளிக்கின்றது என்றும், திருப்பயணங்கள் கடவுளின் அன்பை மேலும் மேலும் புரிந்துகொள்ளவும், வரவேற்கவும் உதவுகின்றன என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 29, சனிக்கிழமை திருப்பயணிகளாக உரோமைக்கு வருகை தந்திருந்த ரியெத்தி மறைமாவட்டத்தைச் சார்ந்த இறைமக்களுக்கான வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளின் அன்பை பிரதிபலிக்க அழைக்கப்பட்டுள்ள நாம் ஒவ்வொருவரும், பலவீனமான மற்றும் மிகவும் தேவைப்படும் மக்களுக்கு, கடவுள் அன்பின் சான்றுகளாக இருக்க அழைக்கப்படுகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
ஓர் உயிருள்ள சுடரைப் போல, நமது வாழ்க்கைப் பயணத்திற்கு கடவுளின் அன்பு பலம் அளிக்கின்றது என்ற உணர்வுடன் ஒவ்வொரு நாளும் நாம் எதிர்நோக்கின் சான்றுகளாக தலத்திருஅவை மற்றும் வாழும் சூழல்களில் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், உடன்பிறந்த உணர்வு மற்றும் நிலையான உலகத்தைக் கட்டியெழுப்ப நாம் ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
தனக்காகத் தொடர்ந்து செபிக்கும்படி திருப்ப்யணிகளிடத்தில் கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை அவர்கள், தூய கன்னி மரியா மற்றும் புனித பார்பராவின் அன்னைவழி பாதுகாப்பை அனைவருக்காகவும் வேண்டிக்கொள்வதாகவும் ரியெத்தி மறைமாவட்ட மக்கள் அனைவருக்கும் தனது ஆசீரை வழங்குவதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்