காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தையின் இரங்கல்
மெரினா ராஜ் - வத்திக்கான்
தென்கொரியாவின் பல்வேறு பகுதிகளில் பரவிவரும் காட்டுத்தீயினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் மற்றும் பேரழிவுகளுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து இரங்கல் தந்திச் செய்தி ஒன்றினை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 28, வெள்ளிக்கிழமை திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்ட இரங்கல் தந்திச் செய்தியில், இறப்பின் வழியாக, இரக்கமுள்ள தந்தையின் அன்பில் இணைந்துள்ளவர்களுக்காக வருந்தும் அனைவருக்கும் தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
காட்டுத்தீயினால் அன்புக்குரியவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தார் ஒவ்வொருவருக்கும் தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், காயமடைந்தவர்களுக்காகவும், மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவரின் முயற்சிக்காகவும் தொடர்ந்து செபிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஆறுதலளிக்கின்ற, குணமளிக்கின்ற மற்றும் ஆற்றல் அளிக்கின்ற இறைவனின் ஆசீரானது பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெற செபிப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தென்கொரியாவில் பரவி வரும் மோசமான காட்டுத்தீயினால் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர் என்றும், 2,70,00 பேர் தீ பரவியுள்ள இடங்களிலிருந்து வேறு இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏறக்குறைய 43,330 ஏக்கர் காட்டுத்தீயினால் எரிந்து பாதிக்கப்பட்டுள்ளது, பழங்கால புத்த கோவில், வீடுகள், தொழிற்சாலைகள் உட்பட 200க்கும் மேற்பட்ட கட்டிடங்களும், ஏராளமான வாகனங்களும் காட்டுத்தீயினால் சேதமாகியுள்ளன.
நாளுக்கு நாள் பரவிவரும் இக்காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக, 130 வானூர்திகள் மற்றும் 4650 தீயணைப்பு வீரர்களும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் என்றும் செய்திகள் எடுத்துரைக்கின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்