திருத்தந்தையின் உடல்நிலையில் தொடர் முன்னேற்றம் உறுதிசெய்யப்பட்டுள்ளது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி முதல் உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலையில் தற்போது தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று மார்ச் 12, புதன்கிழமை மாலை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
இதுவரை எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின்படி, திருத்தந்தையின் உடல்நிலை நிலையானதாகவே உள்ளது என்றும், நேற்று எடுக்கப்பட்ட மார்பு ஊடுகதிர் (chest X-ray) அறிக்கை, முந்தைய நாட்களில் காணப்பட்ட முன்னேற்றங்களை கதிரியக்க ரீதியாக உறுதிப்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, பகலில் அதிக அளவிளான ஆக்ஸிஜனேற்ற சிகிச்சையும், இரவு ஓய்வின் போது, உடலில் துவாரம் உருவாக்காமல் வாய் வழியாக செயற்கை முறை ஆக்ஸிஜன் வழங்கல் சிகிச்சையும் (non-invasive mechanical ventilation) தொடர்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது திருப்பீடச் செய்தித்துறை.
மார்ச் 12, புதன்கிழமை காலை, திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் நிகழ்ந்துவரும் திருப்பீட உயர் அதிகாரிகளுக்கான தவக்கால ஆண்டுத் தியானத்தில் அவர் காணொளி வழியாகப் பங்குபெற்ற பிறகு திருநற்கருணையைப் பெற்று இறைவேண்டலில் ஈடுபட்டார் எனவும், அதனைத் தொடர்ந்து தனக்கு வழங்கப்படும் சிகிச்சையைத் தொடர்ந்தார் எனவும் கூறியுள்ளது.
இந்நாள் மாலையிலும் அவர் தவக்கால ஆண்டுத் தியானத்தில் காணொளி வழியாகப் பங்குபெற்ற பிறகு இறைவேண்டல், ஓய்வு மற்றும் சுவாச உடலியக்க மருத்துவத்தைத் தொடர்ந்தார் (respiratory physiotherapy) என்றும் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.
மார்ச் 13, வியாழக்கிழமை அறிக்கை
மார்ச் 13, வியாழக்கிழமை காலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 12, புதன்கிழமை நேற்று வழக்கம்போல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்றாக உறங்கி ஓய்வெடுத்தார் என்று கூறியுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்