சாம்பல் நம்மை மீண்டும் எதார்த்த வாழ்விற்குக் கொண்டுவருகிறது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சாம்பல் நாம் என்னவாக இருக்கிறோம் என்ற நினைவை நம்மில் புதுப்பிக்கிறது, ஆனால் அதேவேளையில், நாம் என்னவாக இருப்போம் என்ற நம்பிக்கையையும் நம்மில் உருவாக்குகிறது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 05, இப்புதன்கிழமை மாலை 5 மணிக்கு உரோமையிலுள்ள புனித சபீனா பேராலயத்தில் நிகழ்ந்த திருநீற்றுப் புதன் திருப்பலியில் வாசிக்கப்பட்ட அவரது மறையுரையில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை முதல் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதால், அவரால் தயாரிக்கப்பட்ட மறையுரையை இந்தத் திருப்பலியின்போது கர்தினால் Angelo De Donatis அவர்கள் விசுவாசிகளுக்கு வாசித்தார்.
சாம்பல் நமது இறப்பை நினைவூட்டும் அதேவேளை, அது உயிர்த்தெழுதலின் வாக்குறுதியை நோக்கி நம்மை வழிநடத்துகின்றது என்று வலியுறுத்திய திருத்தந்தை, கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக, நாம் மனத்தாழ்மையுடனும் நம்பிக்கையுடனும் தவக்காலத்தின் வழியாகப் பயணிக்க அழைக்கப்படுகிறோம் என்றும் சுட்டிக்காட்டினார்.
சாம்பல் சோர்வு, தோல்விகள், வாழ்க்கையின் நிலையற்ற தன்மை ஆகிய நமது பலவீனங்களை நமக்கு நினைவூட்டுகின்றது என்றும், அவை உலகில் உள்ள அநீதி, சுரண்டல் மற்றும் வன்முறையின் நச்சு தாக்கங்களை அடையாளப்படுத்துகின்றன என்றும் தனது மறையுரையில் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
இருப்பினும், நாம் விரக்தியில் வாடாமல், இயேசு கொண்டு வந்த நம்பிக்கையை நோக்கிப் பார்க்குமாறு விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அவர் தனது தியாக மரணத்தின் வழியாக, நம்மை இறைத்தந்தையுடன் ஒப்புரவாக்கினார் என்றும், நமக்கு நிலைவாழ்வை வழங்கினார் என்றும் மொழிந்தார்.
தவக்காலம் என்பது நமது மனித பலவீனத்தைப் பற்றிச் சிந்தித்து, குறிப்பாக மரணத்தை எதிர்கொள்ளும் போது நமது நம்பிக்கையைப் புதுப்பிப்பதற்கான ஒரு காலமாகும் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இயேசு வழங்கிய உயிர்த்தெழுதலின் நம்பிக்கையுடன், நாம் மண்ணால் ஆனவர்களாக இருந்தாலும், கடவுளுக்கு விலைமதிப்பற்றவர்கள், என்றும் அழியாத நிலைவாழ்வுக்கு குறிக்கப்பட்டவர்கள் என்பதை நினைவில் கொள்ள அழைக்கப்படுகிறோம் என்றும் எடுத்துரைத்தார்.
இறுதியாக, தவக்காலப் பயணம் என்பது நமது பலவீனத்தை அங்கீகரிப்பது மட்டுமல்ல, நம்பிக்கையில் வளர்வதும், கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பதையும், நமது வாழ்வின் துயரங்களாகிய சாம்பலைப் புதிய வாழ்க்கையாக மாற்றுவார் என்பதையும் அறிந்துகொள்வோம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்