திருத்தந்தைக்கு செயற்கை ஆக்சிஜன் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உரோம் நகர் ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் திருத்தந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிறிதளவு முன்னேற்றம் காணப்பட்டு வருவதாகவும் திருப்பீடத் தகவல் தொடர்புத் துறையின் அறிக்கைத் தெரிவிக்கிறது.
மார்ச் 17, திங்கள் மாலையில் திருத்தந்தையின் உடல்நிலை குறித்து திருப்பீடத் தகவல் தொடர்புத்துறை வெளியிட்ட வழக்கமான அறிக்கையில், ஆக்சிஜன் வழங்கும் சிகிச்சை முறை வழங்கப்படுவது தற்போது குறைக்கப்பட்டுள்ளதாகவும், கையில் ஏற்பட்ட வீக்கம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.
திருத்தந்தைக்கு மூக்கு வழியாக வழங்கப்பட்டுவந்த ஆக்சிஜன் சிகிச்சை முறை தற்போது அவ்வப்போது மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும், பல வேளைகளில் அவர் ஆக்சிஜன் சிகிச்சை முறையின் உதவியின்றி சுவாசித்து வருவதாகவும், இரவில் மட்டுமே செயற்கை ஆக்சிஜன் வழங்கும் முறை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் திருப்பீடத்தின் மருத்துவ அறிக்கைத் தெரிவிக்கிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது திருத்தந்தை ஒரே பக்கமாக சாய்ந்து படுத்திருந்ததால் கையில் ஏற்பட்ட வீக்கம், தற்போது பெருமளவில் குறைந்துள்ளதாகவும், திருத்தந்தை தன் நாட்களை ஜெபம், ஓய்வு மற்றும் சிறு பணிகளை ஆற்றுவதன் வழி செலவிடுவதாகவும் இவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் உடல் நிலை குறித்து முழுமையான மருத்துவ அறிக்கை மார்ச் 19, புதன்கிழமை மாலையில் வெளியிடப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்