திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை – இயேசுவும் சமாரியப் பெண்ணும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
மார்ச் 26, புதன்கிழமை யோவான் நற்செய்தியில் இடம்பெறும் சமாரியப் பெண் பற்றிய கருத்துக்களை மறைக்கல்வி உரையாக எழுத்துப்படிவத்தில் வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். கடந்த பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை முதல் உரோமையில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் மூச்சுக்குழாய் அழற்சி நோய்க்கெனெ சிகிச்சை பெற்று, மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லம் திரும்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருத்துவர்களின் பரிந்துரையின்படி மருத்துவ சிக்கிசைகளைத் தொடர்ந்து பெற்றுக்கொண்டு வருகின்றார். திருத்தந்தையின் உடல் நலம் கருதி, அவரது தனிப்பட்ட மற்றும் பொதுச்சந்திப்புக்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்ட நிலையில், தனது புதன்மறைக்கல்வி உரைக்கருத்துக்களை எழுத்துப்படிவமாக வழங்கியுள்ளார்.
எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் யூபிலி ஆண்டில் "இயேசு கிறிஸ்து நமது எதிர்நோக்கு" என்ற தலைப்பில் தனது மறைக்கல்வி உரை சிந்தனைகளை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “இயேசுவின் வாழ்வும் சந்திப்புக்களும்” என்ற இரண்டாவது பகுதியின் இரண்டாம் தலைப்பாக இயேசு சமாரியப் பெண்ணைச் சந்தித்த நிகழ்வு குறித்த தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
யோவான் (4:1-27) நற்செய்தியில் இடம்பெறும் “சமாரியப் பெண் ஒருவரும் இயேசுவும்” என்ற தலைப்பின் கீழ் இடம்பெறும் கருத்துக்களை முன்னிறுத்தி “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்” என்ற தலைப்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் திருத்தந்தை. திருத்தந்தையின் மறைக்க்கல்வி உரைக் கருத்துக்களுக்கு இப்போது நாம் செவிசாய்ப்போம்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
இயேசுவைத் தேடிச் சென்று சந்தித்த நிக்கோதேமுவைப் பற்றி கடந்த வார மறைக்கல்வி உரையில் அறிந்துகொண்ட நாம் இன்று இயேசு நம்மைச் சந்திக்க நமக்காகக் காத்திருந்த நிகழ்வுகளைப் பற்றி சிந்திக்க இருக்கின்றோம். நமது வாழ்வில் அவர் நம்மைச் சந்திக்க காத்துக்கொண்டிருக்கின்றார். நம்மை ஆச்சரியப்படுத்தும் இயேசுவுடனான சந்திப்புகளில், நாம் எப்படி விவேகத்துடன் இருக்க வேண்டும் எனவும், நம் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவும் நாம் முயற்சிக்கவேண்டும்.
யோவான் நற்செய்தியின் நான்காம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சமாரியப் பெண்ணின் அனுபவமும் இதைப்போன்று தான் இருக்கின்றது. நண்பகலில் கிணற்று ஓரமாய் ஒரு மனிதரைச் சந்திப்போம் என்று சமாரியப்பெண் எதிர்பார்க்கவில்லை. உண்மையில், யாரையுமே பார்க்க மாட்டோம் என்று அப்பெண் நம்பினார். வெப்பம் மிகுந்த நண்பகல் வேளையில், அதாவது யாரும் வெளிவர நினைக்காத நேரத்தில், கிணற்றில் தண்ணீர் எடுக்கச் செல்கிறார். ஒருவேளை தன் வாழ்க்கையைப் பற்றி வெட்கமுற்ற ஒரு பெண்ணாக, பிறரால் நீதித்தீர்வைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணாக அவர் இருந்திருக்கலாம் என்பதை இச்செயல் எடுத்துரைக்கின்றது. பிறரால் கண்டனம் செய்யப்பட்ட அப்பெண் அதன் காரணமாகத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கின்றார். அனைவருடனான தன்னுடைய உறவுகளை முறித்துக் கொள்கிறார்.
யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையிலான இறுக்கமான உறவுகளைக் கருத்தில் கொண்டு, யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குச் செல்ல இயேசு சமாரியா வழியாகச் செல்லாமல் வேறு வழியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அது அவருக்குப் பாதுகாப்பாகக்கூட இருந்திருக்கும். அதற்கு பதிலாக, அவர் சமாரியா செல்ல விரும்பி கிணற்று ஓரத்தில், அந்த நண்பல் வேளையில் நிற்கிறார். இயேசு நமக்காகக் காத்திருக்கிறார், நமக்கு இனி எதிர்நோக்கு இல்லை என்று நாம் நினைக்கும் நேரத்தில் அவர் நம் கண்முன் காணப்படுகிறார். பண்டைய மத்திய கிழக்கில் சந்திப்புக்கான இடமாகக் கிணறு இருந்தது. சில நேரங்களில் திருமண ஒப்பந்தங்கள், திருமண நிகழ்வுகள் நடக்கும் இடமாகவும் கிணறுகள் இருக்கின்றன. பிறரால் அன்பு செய்யப்பட வேண்டும் என்ற சமாரியப் பெண்ணின் விருப்பதிற்கான உண்மையான பதிலை எங்கு தேட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள இயேசு அவருக்கு உதவ விரும்புகிறார்.
“குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்” என்று கூறி இயேசுவே முதலில் தனது விருப்பத்தை எடுத்துரைக்கின்றார். இதன்வழியாக உரையாடலைத் துவக்குகின்றார், தாகத்தோடு காத்திருக்கும் நபராக, பலவீனமானவராகத் தன்னை வெளிப்படுத்தி, எதிரில் இருக்கும் நபரை அச்சமின்றி அவரது நிலையிலேயே இருக்க வைக்கின்றார். தாகம் என்பது விருப்பத்தின் அடையாளமாக விவிலியத்தில் பல இடங்களில் எடுத்துரைக்கப்படுகின்றது. இயேசு எல்லாவற்றிலும் முதன்மையாக, சமாரியப் பெண்ணின் மீட்பினை விரும்பும் தாகம் கொண்டவராக இருக்கின்றார். தூய அகுஸ்தீன் கூறுவது போல சமாரியப் பெண்ணோ நம்பிக்கைக்கான தாகம் கொண்டவராக இருந்தார்.
நிக்கோதேமு இயேசுவைச் சந்திக்க இரவில் சென்றார், ஆனால், சமாரியப் பெண்ணை ஒளி நிறைந்த நண்பகலில் சந்திக்கின்றார் இயேசு. தன்னை மெசியாவாக வெளிப்படுத்தி அவரது வாழ்வை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார் எனவே வெளிப்பாட்டின் நேரமாக இச்சந்திப்பு இருக்கின்றது. சமாரியப்பெண்ணின் வாழ்க்கைக் கதையை ஒரு புதிய வழியில் மீண்டும் படிக்க இயேசு அவருக்கு உதவுகிறார். அப்பெண்ணின் வாழ்க்கை மிகவும் சிக்கலானது மற்றும் வேதனையானது: அவருக்கு ஐந்து கணவர்கள் இருந்தனர், இப்போது ஆறாவதாக ஒருவருடன் இருக்கிறார், அவர் அவருடைய கணவர் அல்ல. ஆறு என்ற எண் சீரற்றது. ஒழுங்கற்ற தன்மையைக் குறிக்கின்றது. உண்மையாகப் பிறரால் அன்பு செய்யப்பட வேண்டும் என்ற சமாரியப் பெண்ணின் விருப்பத்தை ஏழாவது மணமகனால் திருப்திப்படுத்த முடியும். அந்த மணமகன் இயேசுவாக மட்டுமே இருக்க முடியும்.
இயேசு தனது வாழ்க்கையை அறிந்திருக்கிறார் என்பதை அப்பெண் உணரும்போது, தனது உரையாடலை யூதர்களையும் சமாரியர்களையும் பிரித்த மதப் பிரச்சினைக்கு மாற்றுகிறார். நாம் செபிக்கும்போது சில சமயங்களில் நமக்கும் இது நிகழ்கிறது. கடவுள் எப்போதும் பெரியவர், மேலும் கலாச்சார வழக்கத்தின்படி அவர் பேசக்கூடாத அந்த சமாரியப் பெண்ணுக்கு, அவர் மிக உயர்ந்த வெளிப்பாட்டைக் கொடுக்கிறார். ஆவியிலும் உண்மையிலும் வணங்கப்பட வேண்டிய தந்தைக் கடவுளைப் பற்றி இயேசு அப்பெண்ணுக்கு எடுத்துரைக்கின்றார் இயேசு. ஆச்சரியமுற்ற அப்பெண், “கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்” என்று கூறுகின்றார். இயேசு அவரிடம், “உம்மோடு பேசும் நானே அவர்” என்று கூறுகிறார். இது அன்பின் அறிவிப்பாகத் திகழ்கின்றது. நீ யாருக்காகக் காத்திருக்கின்றாயோ அவரே நான் என்ற இயேசுவின் வார்த்தைகள், பிறரால் அன்பு செய்யப்பட வேண்டும் என்ற அப்பெண்ணின் விருப்பத்திற்கான இறுதியான பதிலாக அமைகின்றது.
இச்சந்திப்புக்குப் பின் அப்பெண் கிராம மக்களை அழைக்க ஓடுகிறார். அப்பணியானது அப்பெண் தான் அன்பு செய்யப்படுகின்றோம் என்பதை உணரும் அனுபவத்திலிருந்து துல்லியமாக வெளிப்படுகிறது. புரிந்துகொள்ளப்பட்ட, வரவேற்கப்பட்ட, மன்னிக்கப்பட்ட அனுபவமாக இயேசுவுடனான சந்திப்பு இல்லாவிட்டால் அப்பெண் எத்தகைய அறிவிப்பைக் கொண்டு வந்திருக்க முடியும்? நற்செய்தியை அறிவிப்பதற்கான புதிய வழிகளுக்கான நமது தேடலைப் பற்றி சிந்திக்க வைக்கும் ஒரு அடையாளமாக இச்செயல் உள்ளது.
அன்பு செய்யப்பட்ட நபராக சமாரியப் பெண் இயேசுவின் காலடியில் தனது குடத்தை மறந்து விட்டுச்செல்கிறாள். இதற்குமுன் அவர் நீர் எடுத்துக்கொண்டு வீடு திரும்பும் ஒவ்வொரு முறையும் அவர் தலையில் இருந்த அந்த குடத்தின் பாரம் அவருடைய நிலையை, பிரச்சனை நிறைந்த அவரது வாழ்க்கையை நினைவூட்டிக்கொண்டே இருந்திருக்கும். ஆனால் இப்போது குடம் இயேசுவின் காலடியில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த காலம் இனி ஒரு சுமை அல்ல, அப்பெண் இயேசுவின் அன்பினால் மனமாற்றம் செய்யப்பட்டவர். நற்செய்தியை அறிவிக்கச் செல்லும் முன் நாம் நமது வாழ்க்கைப் பாரத்தை, சுமையைக் கடவுளின் பாதத்தில் வைக்க வேண்டும். நமது கடந்த காலத்தின் பாரத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். இயேசுவோடு இணக்கமானவர்களால் மட்டுமே நற்செய்தியை எடுத்துச் செல்ல முடியும்.
அன்புள்ள சகோதர சகோதரிகளே, எதிர்நோக்கை ஒருபோதும் இழக்காதிருப்போம். நமது வாழ்க்கைக் கதைகள் சுமையானதாகவும், சிக்கலானதாகவும், பாழடைந்தது போனது போன்று காணப்பட்டாலும், அதைக் கடவுளிடம் ஒப்படைப்போம். நம் வாழ்க்கைப் பயணத்தை புதிதாகத் தொடங்கக்,நமக்கு எப்போதும் ஒரு வாய்ப்பு உள்ளது. கடவுள் இரக்கமுள்ளவர். அவர் எப்போதும் நமக்காகக் காத்திருக்கிறார்.
இவ்வாறு தனது மறைக்கல்வி உரைக்கருத்துக்களை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்