சிலுவை என்னும் நங்கூரத்தால் நாம் மீட்கப்பட்டுள்ளோம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
பெருந்தொற்று நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மனித குலத்திற்காக வத்திக்கான் வளாகத்தில், கொட்டும் மழையில் நனைந்து கொண்டு, தனி ஒருவராக செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நம்பிக்கை, நம்மை அழைக்கின்றது என்றும், நம்மிடம் ஒரு நங்கூரம் இருக்கின்றது, இயேசுவின் சிலுவையால் நாம் மீட்கப்பட்டுள்ளோம் என்றும் கூறினார் பேரருள்ஜிரு Lucio Ádrian Ruiz.
மார்ச் 14, வெள்ளிக்கிழமை மாலை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், திருத்தந்தையின் உடல் நலத்திற்காக ஏறெடுக்கப்பட்ட சிறப்பு செபமாலையின் தொடக்கத்தில், 2020 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்வினை நினைவுறுத்தி இவ்வாறு கூறினார் திருப்பீடத் தகவல் தொடர்புத் துறையின் தலைவர் பேரருள்திரு Lucio Ádrian Ruiz.
மார்ச் 14, வெள்ளிக்கிழமை மாலை இரவு 7.30 மணிக்கு, மீண்டும் வத்திக்கான் வளாகத்தில் நடைபெற்ற செபமாலை பக்தி முயற்சியை திருப்பீடத் தகவல் தொடர்புத் துறையின் தலைவர் பேரருள்திரு. Lucio Ádrian Ruiz. அவர்கள் வழிநடத்தினார். இதில் ஏராளமான வத்திக்கான் தகவல் தொடர்புத்துறைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
கடந்த பிப்ரவரி 24 முதல் உரோம் நகரிலுள்ள கர்தினால்கள், வத்திக்கான் அதிகாரிகள் மற்றும் விசுவாசிகளோடு இணைந்து உரோம் நேரம் இரவு 9 மணிக்கு ஒவ்வொரு நாளும் புனித பேதுரு பேராலய வளாகத்தில் கூடி ஜெபமாலை செபித்து வந்த வேளையில் கடந்த சில நாள்களாக வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்று வரும் தவக்கால தியானத்தின் இறுதியில் இச்சிறப்பு செபமாலையானது செபிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மார்ச் 14, வெள்ளிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 7.30 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலைக்காக வத்திக்கான் வளாகத்தில் சிறப்பு செபமாலையானது செபிக்கப்படத் தொடங்கப்பட்டது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது 2020 -ஆம் ஆண்டு மார்ச் 27 அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்றால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டு அஞ்சிக் கொண்டிருந்த மனித சமுதாயத்திற்காக, வத்திக்கான் வளாகத்தில் கொட்டும் மழையில் தனி ஒருவராக நடந்து சென்றார் என்று எடுத்துரைத்த பேரருள்திரு Ruiz அவர்கள், திருத்தந்தை மக்களுக்காக செப நிகழ்வு ஒன்றை நிறைவேற்றி, சிறப்பு ஊர்பி எத் ஓர்பி ஆசீர் வழங்கி, கடவுளிடம் மன்றாடினார், எதிர்நோக்கின் அடையாளத்திற்காகக் காத்திருந்தார் என்றும் நினைவுகூர்ந்தார்.
இன்றும் எதிரொலிக்கும் அவரின் நம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் நம்மை விசுவாசத்திற்கு அழைக்கின்றன என்றும், இந்த எதிர்நோக்கே நம் உள்ளத்திற்குப் பாதுகாப்பான, உறுதியான, நங்கூரம் போன்றுள்ளது என்றும் கூறினார் பேரருள்திரு Ruiz.
நமக்கென்று ஒரு நங்கூரம் உள்ளது: இயேசுவின் சிலுவையில் நாம் மீட்கபப்பட்டுள்ளோம், அவருடைய சிலுவையால் நாம் விடுவிக்கப்பட்டுள்ளோம் என்றும் கூறிய பேரருள்திரு Ruiz அவர்கள், நமக்கு ஓர் எதிர்நோக்கு உள்ளது, அவருடைய சிலுவையால் நாம் குணமடைகின்றோம், தழுவப்படுகின்றோம் என்றும் எடுத்துரைத்தார்.
அவருடைய மீட்கும் அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்கமுடியாது, எனவே இறைவனைத் தழுவுவதன் வழியாக எதிர்நோக்கைத் தழுவுவோம், ஏனெனில், அவரோடு நாம் பயணிக்கும் போது, நமது வாழ்க்கைக் கப்பல் விபத்துக்கு உள்ளாவதில்லை என்றும் கூறினார்.
நமது எதிர்நோக்கின் அடையாளமாக வத்திக்கான் வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உடல் நலத்திற்காக செபிப்போம் என்றும், இறைத்தந்தையிடம் நமது செபங்களை ஏறெடுத்து நமது அன்பையும் அருகிருப்பையும் வெளிப்படுத்துவோம் என்றும் கூறினார் பேரருள்திரு Ruiz.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்