மருத்துவமனை சிற்றாலயத்தில் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஜெமெல்லி மருத்துவமனை சிற்றாலய அருள்பணியாளர்களுடன் இணைந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றினார் என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் அறிவித்துள்ளது திருப்பீடத் தகவல் தொடர்பகம்.
மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிற்றாலயத்தில் செபிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு திருத்தந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாக அறிவித்து, இவ்வாறு தெரிவித்துள்ளது திருப்பீடத்தகவல் தொடர்பகம்.
கடந்த பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை முதல் உரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூச்சுக்குழாய் அழற்சி நோய்க்கென சிகிச்சை பெற்று வரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமையுடன் ஏறக்குறைய 31 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்குப் பின் முதன்முறையாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளது திருப்பீடத் தகவல் தொடர்பகம்.
அதன்படி ஞாயிறு காலை ஜெமெல்லி மருத்துவமனை 10-ஆவது தளத்தில், தான் தங்கியிருக்கும் அறைக்கு அருகில் இருக்கும் சிற்றாலயத்தில், அருள்பணியாளர்கள் சிலருடன் இணைந்து கூட்டுத்திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை அவர்கள், திருப்பலி நிறைவில் திருச்சிலுவை முன்பாக, சக்கர நாற்காலியில் அமர்ந்தவண்ணம், திருப்பலி உடைகளோடு செபிப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பலியைத் தொடர்ந்து சுவாச உடலியக்க மருத்துவ சிகிச்சை முறைகளையும், செயற்கை ஆக்சிஜன் வழங்கும் சிகிச்சை முறையையும் பெற்ற திருத்தந்தை அவர்கள், இன்று பார்வையாளர்கள் யாரையும் சந்திக்கவில்லை என்றும், செபம், ஓய்வு, சிறிதளவு பணிகள் போன்றவற்றிற்காக தனது நாளை செலவழித்தார் என்றும் அறிவித்துள்ளது.
மார்ச் 17, திங்கள்கிழமை மருத்துவர்களின் அறிக்கை எதுவும் இருக்காது என்றும் மாலையில் திருப்பீடத் தகவல் தொடர்பகம் பத்திரிக்கையாளர்களுக்கு திருத்தந்தையின் உடல்நிலை குறித்த சில தகவல்களை வழங்கும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்