திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பாலின் அமைதி பற்றிய இறைவாக்குரைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஏப்ரல் 2 , புதன்கிழமை இன்று, திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் இறைபதமடைந்து இருபது ஆண்டுகள் நிறைவடையும் வேளை (ஏப்ரல் 2, 2005), திருஅவை எவ்வாறு இவரைக் கொண்டாடுகிறது என்பதையும், போருக்கு எதிரான இவரின் வேண்டுகோள்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டுள்ளார் திருப்பீடச் சமூகத்தொடர்புத் துறையின் செய்திப் பிரிவுத் தலைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி.
இந்தப் பகிர்வில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் மனித மாண்பு மற்றும் மதச் சுதந்திரத்தின் பாதுகாவலராக அவரது பங்களிப்பையும், குறிப்பாக கம்யூனிசத்திற்கு எதிரான அவரது எதிர்ப்புக் குரல்களையும் பதிவுசெய்துள்ளார் தொர்னியெல்லி.
புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் இறைவாக்குரைத்தலின் எச்சரிக்கைகளை நினைவுபடுத்தியுள்ள தொர்னியெல்லி அவர்கள், குறிப்பாக, 2000-மாம் ஆண்டில், மனிதகுலம் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்கவோ அல்லது அதை அழிக்கவோ பெரும் வலிமையுடன் ஒரு குறுக்கு வழியில் நிற்கிறது என்று அவர் எச்சரித்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார் தொர்னியெல்லி.
Parkinson disease எனப்படும் நடுக்குவாத நோயால் உடல் ரீதியான சவால்களை அவர் எதிர்கொண்ட போதிலும், 1990-கள் மற்றும் 2000-களில் வளைகுடாப் போர்களுக்கு அவர் காட்டிய எதிர்ப்புக் குறித்தும், குறிப்பாக, போருக்கு எதிரான அவரது வலுவான நிலைப்பாட்டைக் குறித்தும் எடுத்துக்காட்டியுள்ளார் தொர்னியெல்லி.
போரின் கொடூரங்களை எடுத்துக்காட்டியும், எதிர்கால சந்ததியினர் அதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் வழங்கிய அமைதிச் செய்தி, அதிகரித்து வரும் இராணுவப் பதட்டங்களை உலகம் எதிர்கொண்டு வரும் நிலையில் இன்றும் பொருத்தமாக உள்ளது என்பதையும் கோடிட்டுக்காட்டியுள்ளார் தொர்னியெல்லி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்