இறைமக்களைக் காத்து, தீமையிலிருந்து விடுவிக்கும் கடவுளின் விரல்
மெரினா ராஜ் – வத்திக்கான்
நலவாழ்வுப் பணியாளர்களின் பணி எளிதானது அல்ல, அவர்களை நாம் ஆதரிக்கவும் மதிக்கவும் வேண்டும் என்றும், கடவுளின் விரல் அவரது பிள்ளைகளைக் காக்கும், தீமையிலிருந்து அவர்களை விடுவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 6, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த இறைமக்களுக்கு எழுப்படிவத்தில் வழங்கிய மூவேளை செப உரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தவக்காலத்தின் ஐந்தாம் வார நற்செய்தி வாசகமானது விபசாரத்தில் பிடிபட்ட பெண் பற்றிய கருத்துக்களை முன்வைக்கின்றது என்றும், மறைநூல் அறிஞரும், பரிசேயரும் அப்பெண்ணைக் கல்லால் எறிந்து கொல்ல முயன்றபோது, இயேசு அப்பெண்ணின் அழகை மீட்டெடுக்கின்றார் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
தரையில் விழுந்த அப்பெண்ணுக்கு தனது விரலை நீட்டி, தரை மீது அப்பெண்ணிற்காக ஒரு புதிய வாழ்க்கைக் கதையை இயேசு எழுதுகின்றார் என்றும், கடவுளின் விரல் அவரது பிள்ளைகளைக் காக்கும் தீமையிலிருந்து அவர்களை விடுவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோதும், இப்போது குணமடைந்து வரும் நிலையின்போதும், தான், "கடவுளின் விரலை" உணர்ந்ததாக எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் அன்பான அரவணைப்பைத் தான் உணர்வதாகவும் பகிர்ந்துள்ளார்.
நோயாளர்கள் மற்றும் உலக நலவாழ்வுக்கான யூபிலி நாளில் கடவுளது இந்த அன்பின் தொடுதல், துன்புறும் அனைத்து மனிதர்களையும் தொடும் என்றும், நோயாளர்களைக் கவனித்துக்கொள்பவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் என்றும், மொழிந்துள்ள திருத்தந்தை அவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், நலவாழ்வுப் பணியாளர்கள் ஆகிய அனைவருக்காகவும் தான் செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நலவாழ்வுப் பணியாளர்களின் பணி
நலவாழ்வுப் பணியாளர்களின் பணி எளிதானது அல்ல, அவர்களை ஆதரிக்கவும் மதிக்கவும் வேண்டும் என்றும், தேவையான அடிப்படை வளங்கள் அனைத்தும் மருத்துவ ஆராய்ச்சிகள் மற்றும் சிகிச்சைகளில் முதலீடு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நலவாழ்வு அமைப்புக்கள் பலவீனமான மற்றும் ஏழை மக்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்தில், அடிப்படை வளங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
உரோம் நகரில் உள்ள ரெபிபியா பெண்கள் சிறைச்சாலையின் கைதிகள் தனக்கு அனுப்பிய செய்திக்காக நன்றி கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், அவர்களுக்காகவும் அவர்களது குடும்பங்களுக்காகவும் தொடர்ந்து செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைதிக்கான விண்ணப்பங்கள்
அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக விளையாட்டு தினத்தன்று, அமைதி மற்றும் சமூக உள்ளடக்கம் தேவைப்படும் பலருக்கு, விளையாட்டு நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும், உடன்பிறந்த உணர்விற்கு உறுதியான கல்வியை அளிக்கும் விளையாட்டுச் சங்கங்களுக்கு நன்றி கூறுவதாகவும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
அமைதிக்காகத் தொடர்ந்து செபிப்போம் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், உக்ரைனில் நடைபெற்ற தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், காசாவில், மக்கள் கற்பனை செய்ய முடியாத சூழ்நிலையில், தங்குமிடம், உணவு, தூய்மையான நீர் இன்றி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
ஆயுதங்கள் அமைதியாக்கப்பட்டு, உரையாடல் மீண்டும் தொடங்கப்படட்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள திருத்தந்தை அவர்கள், அனைத்து பிணையக்கைதிகளும் விடுவிக்கப்படட்டும், மக்கள் மீட்கப்படட்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கு முழுவதும் அமைதி நிலவ வேண்டி செபிப்போம் என்றும், சூடான் மற்றும் தென்சூடான், காங்கோ ஜனநாயகக் குடியரசு, நில அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட மியான்மார், வன்முறையினால் இரண்டு பெண் துறவறத்தார் கொலைசெய்யப்பட்ட ஹெய்ட்டி ஆகிய நாடுகளுக்காக செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்