திருத்தந்தையின் ஏப்ரல் மாத செபக் கருத்து!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு மனித உறவுகளுக்கு மாற்றாக அமையாது என்பதால், அவைகள் மனிதரின் மாண்பை மதிக்கவும், நமது காலத்தின் நெருக்கடிகளை எதிர்கொள்ளவும் உதவும்படியாக ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம் என்று காணொளிப் பதிவு ஒன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 1, இச்செவ்வாயன்று வெளிட்டுள்ள ஏப்ரல் மாதத்திற்கான தனது செபக் கருத்தில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, தொழிநுட்பக் கருவிகளில் மனித முகங்களைப் பார்ப்பதைக் குறைத்து, நேருக்கு நேர் பார்த்து உறவுகளை வளர்த்துக்கொள்ளவும் அழைப்புவிடுத்துள்ளார்.
நாம் மக்களுடன் இருப்பதை விட கைப்பேசிகளில்தான் அதிக நேரம் செலவிடுகிறோம் என்றால் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம் என மொழிந்துள்ள திருத்தந்தை, இத்தகையத் தொழில்நுட்பக் கருவிகளின் திரைகள், நம்மத்தியில் உயிர் வாழ்ப்பவர்கள், சிரிப்பவர்கள், அழுபவர்கள் என்று உண்மையான மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்கச் செய்கிறது என்றும் எச்சரித்துள்ளார்.
தொழில்நுட்பம் என்பது கடவுள் நமக்குக் கொடுத்துள்ள அறிவுத்திறத்தின் பலன்தான் என்றாலும், நாம் அதை சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்றும், இது மற்றவர்களைத் தவிர்த்து, ஒரு சிலருக்கு மட்டுமே பலனளிக்க முடியாது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
ஆகவே, நாம் என்ன செய்ய வேண்டும்? என்று கேள்வியெழுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொழில்நுட்பத்தை மனித உறவுகளைப் பிரிப்பதற்கு அல்ல, மாறாக, ஒன்றுபடுவதற்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் விசுவாசிகளிடம் இந்தக் காணொளிப் பதிவில் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.
மேலும் ஏழைகளுக்கு உதவவும், நோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை மேம்படுத்தவும், நமது பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியைப் பாதுகாக்கவும், நம் அனைவரையும் சகோதர சகோதரிகளாக ஒன்றிணைக்கவும் நாம் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.
நாம் ஒருவரையொருவர் நமது கண்களில் பார்க்கும்போதுதான், உண்மையில் நாம் ஒரே இறைத்தந்தையின் சகோதரர்கள், சகோதரிகள், குழந்தைகள் என்ற முக்கியமான ஒன்றைக் கண்டுபிடிப்போம் என்றும் கூறி தனது செபக் கருத்துக்கள் அடங்கிய ஏப்ரல் மாதத்திற்கான காணொளிப் பதிவை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்