தேடுதல்

பாகிஸ்தானில் இரமதான் பாகிஸ்தானில் இரமதான் 

பல்சமய ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்த இரமதான்

வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுகின்ற, அல்லது, அவை வன்முறைகளால் அச்சுறுத்தப்படுகின்ற ஒவ்வொரு நேரமும், அச்செயல், மதத்தின் போதனைகளிலிருந்து விலகுவதாக உள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலகெங்கும் இரமதான் புனித மாதத்தைச் சிறப்பித்துவரும் முஸ்லிம்கள் கோவிட்-19 கொள்ளை நோய் காலத்தில், தோழமையுணர்வைக் காட்டுமாறு அழைப்பு விடுத்துள்ளார், திருப்பீட பல்சமய உரையாடல் அவை தலைவர், கர்தினால் Ángel Ayuso Guixot.

இரமதான் மாதத்தை முன்னிட்டு உலகெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி குறித்து, வத்திக்கான் செய்தித் துறைக்குப் பேட்டியளித்த கர்தினால் Ayuso Guixot அவர்கள், கிறிஸ்தவர்களுக்கு இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா கொண்டாட்டங்கள் போன்று, நம் முஸ்லிம் நண்பர்களுக்கு இரமதான் விழா முக்கியமானது என்று கூறினார்.

இந்த கோவிட்-19 சமுதாய தனித்திருத்தல் காலத்தில், இந்த விழாவைக் குழுமமாகக் கொண்டாட இயலாது என்பதால், இவ்வாண்டு இந்த விழா, தனிப்பட்டவரின் அகவாழ்வை அதிகம் சார்ந்துள்ளது என்று கூறிய கர்தினால் Ayuso Guixot அவர்கள், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் உடன்பிறந்த உணர்வில் ஒன்றித்திருந்து, மனித சமுதாயத்திற்கு ஒருமைப்பாட்டுணர்வைக் காட்டவேண்டும் என்று தான் விரும்புவதாகக் கூறினார்.

இந்த இக்கட்டானச் சூழல்களால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள மனித சமுதாயம், அவற்றை எதிர்கொள்ளவும், அனைத்து மனிதர்களும் காப்பாற்றப்படவும், எல்லாவல்ல மற்றும், இரக்கம்நிறைந்த கடவுளை மன்றாடுமாறு, கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் கேட்டுக்கொண்டார், கர்தினால் Ayuso Guixot. 

இவ்வாண்டு இரமதான் மாதத்திற்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்படுவதற்கு, கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஒன்றிணைந்து உழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார், கர்தினால் Ayuso Guixot.

வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுகின்ற, அல்லது, அவை வன்முறைகளால் அச்சுறுத்தப்படுகின்ற ஒவ்வொரு நேரமும், அச்செயல், மதத்தின் போதனைகளிலிருந்து விலகுவதாகவும், உலகளாவிய சட்டத்தை தெளிவாக மீறுவதாகவும் உள்ளது என்றும், கர்தினால் Ayuso Guixot அவர்கள் எச்சரித்தார்.

இத்தகைய வன்முறைச் செயல்களுக்கு, மதநம்பிக்கையாளர்களும், மதநம்பிக்கையற்றவர்களும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், மத சுதந்திரத்திற்கு, உரிமையும், கடமையும் முக்கியம் என்றும், திருப்பீட பல்சமய உரையாடல் அவை தலைவர், கர்தினால் Ángel Ayuso Guixot அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2020, 14:43