"உயிர்களின் பன்முகத்தன்மையைக் காக்கும் அவசரம்"
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
உலகில் படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு உயிரும் தன்னிலேயே உள்ளார்ந்த மதிப்பையும், அது படைக்கப்பட்டதன் நோக்கத்தையும் கொண்டுள்ளது என்றும், ஒவ்வொரு உயிரும் மதிப்புடன் நடத்தப்பட வேண்டும் என்றும் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.அவை கூட்டத்தில் கூறினார்.
"உயிர்களின் பன்முகத்தன்மையைக் காக்க அவசர செயல்பாடுகள்" என்ற தலைப்பில், செப்டம்பர் 30 இப்புதனன்று ஐ.நா. நிறுவனத்தால் நடத்தப்பட்ட இணையவழி கூட்டத்திற்கு, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் அவர்கள் அனுப்பிய காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தப் பூமிக்கோளத்திற்கு வழங்கப்பட்டுள்ள வியக்கத்தக்க கொடைகளையும், குறிப்பாக, படைக்கப்பட்ட உயிர்களின் பன்முகத்தன்மையையும் நன்றியோடு தியானித்து, அவற்றைக் காப்பதற்கு மனிதர்களாகிய நம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று, பேராயர் காலகர் அவர்கள், தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.
பெரும் தொழில் நிறுவனங்களின் விரிவாக்கம், தூய்மைக்கேடு, கடலில் கலந்துள்ள நெகிழி மாசுகள், அணுசக்தி சோதனைகள், இயற்கையில் கலக்கும் கழிவுகள் என்று பல்வேறு காரணங்களால் இன்று நாம் உயிர்களின் பன்முகத்தன்மையை இழந்து வருகிறோம் என்று பேராயர் காலகர் அவர்கள் கவலையை வெளியிட்டார்.
உயிர்களின் பன்முகத்தன்மையை உள்ளடக்கியக் கருவூலங்களான அமேசான், காங்கோ, ஆசிய காடுகள் ஆகியவற்றைக் காப்பதன் வழியே இவ்வுலகின் படைப்பை நாம் காக்க முடியும் என்பதை, பேராயர் காலகர் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.
ஒவ்வொரு உயிரும் மதிப்பு மிக்கது என்ற அடிப்படை கருத்தியலை வளர்ப்பது, குறிப்பாக, அவ்வுண்மையை அடுத்த தலைமுறையினரின் உள்ளங்களில் ஆழமாகப் பதிப்பது நம் கடமை என்று பேராயர் காலகர் அவர்கள் தன் காணொளிச் செய்தியில் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்