படைப்பு அனைத்தோடும் உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ள...
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட Laudato si திருமடலை மையப்படுத்தி, இத்தாலியின் மையப்பகுதியான வித்தெர்போவின் (Viterbo) மோந்தேஃபியாஸ்கோனே (Montefiascone) எனுமிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கண்காட்சியை, ஜூன் 24, இவ்வியாழனன்று திருப்பீடச்செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திறந்துவைத்தார்.
ஒருங்கிணைந்த சூழலியலுக்காக Rocca dei Papi என்ற கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சியில், கருத்தரங்குகள், கண்காட்சி அரங்குகள், மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இறைவனோடும், ஒருவர், ஒருவரோடும், இறைவனின் படைப்பு அனைத்தோடும் உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ள, திருத்தந்தை, தன் Laudato si திருமடல் வழியே விடுக்கும் அழைப்பைக் கொண்டாட, இந்த கண்காட்சியும், திருவிழாவும் உதவும் என்று, புனிதர் பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் செயலரான பேராயர் ஃபாபியோ ஃபாபேனே (Fabio Fabene) அவர்கள் கூறினார்.
இந்தக் கண்காட்சியின் துவக்க விழா நிகழ்வுகள், ஜூன் 27 வருகிற ஞாயிறன்று முடிவுற்றாலும், இந்தக் கண்காட்சி, செப்டம்பர் 30ம் தேதி முடிய நீடிக்கும் என்று, இந்தக் கண்காட்சியின் பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இத்தாலியில் ஒருங்கிணைந்த சூழலியலை பேணிக்காக்கும் தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும், இந்தக் கண்காட்சியின் இறுதிநாளன்று, 'படைப்பின் பாதுகாவலர்கள்' என்ற விருது வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்