தேடுதல்

Lviv நகரில் புலம்பெயர்ந்தோருடன் கர்தினால் Krajewski Lviv நகரில் புலம்பெயர்ந்தோருடன் கர்தினால் Krajewski  

இறைவேண்டலின் உதவியால் போரை நிறுத்த முடியும்

மார்ச் 10, இவ்வியாழன் மாலையில், Lviv பேராலயத்தில், கர்தினால் Krajewski அவர்கள், பல்சமய திருவழிபாடு ஒன்றை தலைமையேற்று நிறைவேற்றினார்

மேரி தெரேசா: வத்திக்கான்

மார்ச் 10, இவ்வியாழனன்று, உக்ரைன், இரஷ்யா ஆகிய இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையே துருக்கி நாட்டில் இடம்பெற்ற சந்திப்பு உடன்பாடின்றி முடிவடைந்துள்ளதையொட்டி, Lviv நகரில் தன்னிடம் கேள்விகள் கேட்ட செய்தியாளர்களிடம், நான் நற்செய்திப் போதனைகளின் அடிப்படையில் இங்கு வந்துள்ளேன் என்று, திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski அவர்கள் தெரிவித்துள்ளார். 

தான் ஒரு தூதரக அதிகாரி அல்ல எனவும், துன்புறும் மக்களோடு எப்போதும் இருந்த இயேசு கிறிஸ்துவின் போதனைகளின் அடிப்படையில் பணியாற்றுவதற்காக உக்ரைனுக்கு வந்துள்ளேன் எனவும் கர்தினால் Krajewski அவர்கள் கூறியுள்ளார்.  

Lviv பேராலயத்தில் பல்சமய வழிபாடு

கர்தினால் Krajewski
கர்தினால் Krajewski

மேலும், இவ்வியாழன் மாலையில், Lviv பேராலயத்தில், அமைதிக்கான பல்சமய திருவழிபாடு ஒன்றை தலைமையேற்று நிறைவேற்றிய கர்தினால் Krajewski அவர்கள், இறைவேண்டலின் உதவியால் போரை நிறுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

பல்வேறு கிறிஸ்தவ சபைகள், மற்றும், பல்வேறு மதங்களின் பிரதிநிதிகள் பங்குபெற்ற இத்திருவழிபாட்டில் உரையாற்றிய கர்தினால் Krajewski அவர்கள், உக்ரைன் நாட்டிலுள்ள திருஅவை ஒற்றுமையாய் உள்ளது என்றும், இப்போது நாம் எல்லாரும் ஒன்றுசேர்ந்து, அமைதிக்காக இறைவனை வேண்டுகிறோம் என்றும் கூறினார்.  

கடவுள் மீதுள்ள நம்பிக்கையினால் மலைகளையும் நாம் பெயர்த்தெறியலாம் மற்றும், முட்டாள்தனமான போரையும் நிறுத்தலாம் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளேன் என்றுரைத்த கர்தினால் Krajewski அவர்கள், தூபம்போல் நம் செபங்கள் ஒருசேர கடவுளை நோக்கி எழும்பவேண்டும் என்று கூறினார்.

இறைவேண்டலே நம் வலிமை எனவும், இந்த வலிமையை உக்ரைன் மக்களுக்கு  வழங்குவோம் எனவும் உரைத்த கர்தினால் Krajewski அவர்கள், இவ்வியாழன் இரவில், Lviv நகரிலுள்ள திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் பங்கு ஆலயத்தில், புலம்பெயர்ந்த மக்களோடு செபித்த பின்னர், அவர்களோடு இரவு உணவும் அருந்தினார்.

கடுமையான போர் இடம்பெற்றுவரும் உக்ரைன் நாட்டிலிருந்து புலம்பெயரும் மக்களோடு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அருகாமையைத் தெரிவிப்பதற்காக கர்தினால் Krajewski அவர்கள் உக்ரைன் சென்றுள்ளார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 March 2022, 15:07