உக்ரைனில் போர் நிறுத்தப்பட திருப்பீடத்தின் முயற்சிகள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உக்ரைனில் இடம்பெற்றுவரும் கடுமையான போர் முடிவுக்குவரவும், அந்நாட்டில் அமைதி ஏற்படவும் திருப்பீடம் பல்வேறு நிலைகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், TV2000 என்ற இத்தாலிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
முதலாவதாக, அனைத்து நம்பிக்கையாளர்களிடம் இறைவேண்டல் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது, இரண்டாவதாக, மனிதாபிமானக் கண்ணோட்டத்தில், காரித்தாஸ் மற்றும், மறைமாவட்ட அளவில் உதவிகள் ஆற்றப்பட்டு வருகின்றன, தூதரக அளவிலும் அமைதிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று திருப்பீடத்தின் செயல்பாடுகளை விவரித்துள்ளார், கர்தினால் பரோலின்.
முதன்முதலாக, உக்ரைனில் ஆயுதப் பரவலும், ஆயுதத் தாக்குதல்களும் வன்முறையை அதிகரிக்கும் சொற்கள் பரப்பப்படுவதும் நிறுத்தப்படவேண்டும், ஏனென்றால் அச்சொற்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் என்றுரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், தற்போது மரணத்தை வருவிக்கும் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதைக் காண முடிகின்றது என்று கவலை தெரிவித்தார்.
உக்ரைனில் அன்னை தெரேசா சபையினர்
மேலும், உக்ரைனில் பணியாற்றும், புனித அன்னை தெரேசா சபையைச் சேர்ந்த இரு இந்திய அருள்சகோதரிகள் நாட்டைவிட்டுச் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டும், அதற்கு மறுப்பு தெரிவித்து கீவ் நகரில் தொடர்ந்து பணியாற்ற உறுதி எடுத்துள்ளனர்.
இந்தியாவின் மிசோராம் மாநிலத்தைச் சேர்ந்த அருள்சகோதரிகள் Rosela Nuthangi, Ann Frida ஆகிய இருவரும், கீவ் நகரில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் இருந்து பணியாற்றி வருகின்றனர் என்று செய்திகள் கூறுகின்றன. (AsiaNews)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்