உக்ரைனில் அமைதி & உலகப் போர்களை முடிவுக்கு கொணர....
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உக்ரைன் மற்றும் உலகெங்கினும் நிகழ்ந்துவரும் போர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை வழங்கும் அடையாளமாக அமைதிக்கான செபமாலை வழிபாட்டை திருத்தந்தை பிரான்சிஸ். வழி நடத்துகிறார் என்று, புதிய வழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை, மே 26, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது.
மே 31, செவ்வாய்க்கிழமை, மாலை 6 மணிக்கு, உரோமையிலுள்ள அன்னை மரியாவின் பெருங்கோவிலில் (மேரி மேஜர்) உள்ள அமைதியின் அன்னை மரியாவின் திருவுருவத்திற்கு முன்பு இந்த செபமாலை வழிபாட்டை வழிநடநடத்துகிறார் என்று அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
அண்மையப் போரினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் நெருக்கத்தைக் காண்பிப்பதன் அடையாளமாக, உக்ரேனியக் குடும்பம், போரில் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடைய மக்கள், மற்றும் அந்தந்தப் படைகளுடன்கூடிய இராணுவத் தலைவர்களின் குழுவினர் ஆகியோர் இந்த செபமாலை வழிபாட்டில் பங்குகொள்ள அழைக்கப்படுவார்கள் என்றும் அவ்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
அனைத்துலக மரியன்னை திருத்தலங்களும், குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள திருத்தலங்களும், அதேநேரத்தில் திருத்தந்தை வழிநடத்தும் இந்த செபமாலை வழிபாட்டில் இணைந்து பங்குபெறும் என்றும், மேலும் streaming வழியாக இணைக்கப்பட்டு உரோமிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
கடந்த மார்ச் 25 அன்று இயேசுவின் பிறப்பு அறிவிப்புப் பெருவிழாவன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் நடத்தப்பட்ட தவக்கால வழிபாட்டின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து மனிதகுலத்தையும், குறிப்பாக இரஷ்யா மற்றும் உக்ரைனையும் அன்னை மரியாவின் மாசற்ற திருஇதயத்திற்கு அர்ப்பணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்