வத்திக்கானின் சாலை கண்காணிப்பாளர் புதிய இதழ்
மேரி தெரேசா: வத்திக்கான்
ஏழைகளால் ஏழைகளுக்காகத் தயாரிக்கப்படும் சாலை கண்காணிப்பாளர் (L'Osservatore di strada) என்ற 12 பக்கம் கொண்ட மாத இதழின் முதல் பதிவு, ஜூன் 29, புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாவான வருகிற புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நண்பகல் மூவேளை செப உரையின்போது விநியோகிக்கப்படவுள்ளது.
சமூக நட்பு மற்றும், உடன்பிறந்த உணர்வுக்காக நாளிதழ் என்று தலைப்பில் வெளிவரவுள்ள இந்த இதழ், வத்திக்கானின் புனித பேதுரு வளாகம் மற்றும், அதன் அருகிலுள்ள சில சாலைகளில் விற்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பீட பிறரன்பு அமைப்பு, இந்த இதழின் பொறுப்பை சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பிடம் ஒப்படைத்துள்ளது என, இவ்விதழின் தயாரிப்புக்கு உதவிவரும் திருப்பீட தகவல்தொடர்பு அவை அறிவித்துள்ளது. இந்த இதழ் ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிறன்று, இணையதளம் வழியாகவும், அச்சுப்பிரதியாகவும் வெளிவரும் என்றும் அந்த அவை கூறியுள்ளது.
ஏழைகளுக்கு ஆதரவாக குரல்கொடுக்க விரும்பும் வகையில், லொசர்வாத்தோரே ரொமானோ என்ற வத்திக்கானின் தினத்தாளின் துணை இதழாக, சாலை கண்காணிப்பாளர் மாத இதழ் வெளியிடப்படும் என்றும், இவ்விதழின் முக்கிய எழுத்தாளர்களும், விநியோகிக்கப்பவர்களும் ஏழைகளே என்றும், அந்த அவை கூறியுள்ளது.
பொதுவாக தங்களின் குரல்கள் கேட்கப்படாதவர்கள், வாழ்வால் புண்பட்டுள்ளவர்கள், புறக்கணிக்கப்பட்டோர், தேவையற்றோர் எனக் கணிக்கப்பட்டுள்ளோர் போன்றோரின் குரல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், அவர்களின் வாழ்வு அனுபவங்கள், அறிவு மற்றும் விழுமியங்களை உயர்த்திக் காட்டவுமென இவ்விதழ் தயாரிக்கப்படுகிறது என்று திருப்பீட தகவல்தொடர்பு அவை கூறியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்