தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளைச் சமாளிக்க, ஒன்றிப்பு அவசியம்
மேரி தெரேசா: வத்திக்கான்
தற்போது நாடுகளின் அரசுகள் எவ்வளவுக்கு நிலையானதாக இருக்கின்றதோ, அவ்வளவுக்கு, உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்களைச் சந்திக்க இயலும் என்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
“தாகத்தின் உணர்வு: புவியியல் அமைப்புகளுக்குள் தண்ணீர், உரிமைகள், கலைகள், ஆன்மீகம்” என்ற தலைப்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்ட கர்தினால் பரோலின் அவர்களிடம், உக்ரைன், அண்மை ஆப்ரிக்கப் பயணம், ஆயர்கள் பேராயத்தில் மூன்று பெண்கள் நியமனம் போன்ற தலைப்புகளில், பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு விரிவான பதில்களை அவர் வழங்கியுள்ளார்.
உக்ரைன் மீது அக்கறை
உக்ரைன் நாடு மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கீவ் நகருக்குச் சென்று, போரினால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்களோடு தனது அருகாமையைத் தெரிவிக்க விரும்புகிறார் என்றும், கூடிய விரைவில் அந்நாட்டிற்குச் செல்வார் என்றும் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தை கனடா நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது உறுதியாகிவிட்டது என்பதை எடுத்துரைத்தார்.
உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் உலக அளவில் ஏற்படுத்தியுள்ள கடும்விளைவுகள் மற்றும், ஐரோப்பிய அரசுகளில் உருவாக்கியுள்ள குழப்பங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் பரோலின் அவர்கள், இந்தப் போர், உலக அளவில், உணவு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை இந்த அளவுக்கு ஏற்படுத்தும் என்பதை எவரும் கற்பனையில்கூட நினைத்திருக்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஆப்ரிக்கப் பயணம்
இந்த நெருக்கடி நிலைகளை எதிர்கொள்ள, நமக்குள்ளே பிரிவினைகளை வளர்க்காது, ஒற்றுமையாய் செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்ட கர்தினால் பரோலின் அவர்கள், தான் அண்மையில் திருத்தந்தையின் பிரதிநிதியாக ஆப்ரிக்க நாடுகளுக்குச் சென்றது குறித்த கேள்விக்கும் பதில் கூறியுள்ளார்.
காங்கோ மக்களாட்சி குடியரசு மற்றும், தென் சூடான் நாடுகளில், திருத்தந்தை திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கு, தகுந்த காலநிலையும், சூழல்களும் தேவைப்படுகின்றன என்று கூறியுள்ளார்.
ஆயர்கள் பேராயத்திற்கு மூன்று பெண்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பது, திருஅவை, பெண்கள் உலகத்திற்குத் திறந்தமனதாய் இருக்கின்றது என்பதை வெளிப்படுத்துகிறது எனவும், இந்தப் பேராயத்தின் ஆயர்கள் நியமனம் குறித்த மிக முக்கியமான பிரிவுக்கு, இதுவரை பெண்கள் நியமிக்கப்பட்டதில்லை எனவும், கர்தினால் பரோலின் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்