ஒருங்கிணைந்த பயணம், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கு..
மேரி தெரேசா: வத்திக்கான்
திருஅவையில் தற்போது இடம்பெற்றுவரும் “ஒருங்கிணைந்த பயணம்” என்ற நடவடிக்கை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கு, ஒரு முக்கியமான பாதை எனவும், இதில் இலத்தீன் அமெரிக்கத் திருஅவை பயனுள்ள புரிதல்களை வழங்கியுள்ளது எனவும், கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள் கூறியுள்ளார்.
கொலம்பியா நாட்டின் பொகோட்டாவில், CELAM எனப்படும் இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவை நடத்திய சிறப்பு ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் பங்குகொண்ட பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் செர்னி அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.
இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் பகுதி திருஅவைகளைக் குறித்துநிற்கும் 22 ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பான இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவை, கடந்த மூன்றாண்டுகளாக மேற்கொண்ட புதுப்பித்தல் பணியை மீள்ஆய்வு செய்வதற்காக, இம்மாதம் 11ம் தேதி முதல், 14ம் தேதி வரை, சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்தியது,
திருஅவையின் அர்ப்பணம்
நமக்கென விரும்புவதை மற்றவருக்குச் செய்யவேண்டும் என்றும், இவ்வகையில், உலகின் அனைத்து இறைமக்கள், ஆயர்கள், திருப்பீடம், திருத்தந்தை என எல்லாரும், மனிதரின், குறிப்பாக, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஏழைகளின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை ஊக்கப்படுத்த தங்களையே அர்ப்பணித்துள்ளனர் எனவும், கர்தினால் செர்னி அவர்கள் எடுத்துரைத்தார்.
நம் உலகில் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம் என்ற இலக்கை எட்டுவதற்குத் தடையாக இருக்கின்ற கூறுகளை அகற்றுவது குறித்து திருஅவை கவனம் செலுத்தவேண்டும் என இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூறுவதைச் சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் செர்னி அவர்கள், அனைத்து மக்களின், குறிப்பாக, ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இன்ப, துன்பங்களோடு திருஅவையும் ஒன்றித்து, அவர்களுக்கு மீட்பின் நற்செய்தியை அறிவிக்கிறது என்று கூறியுள்ளார்.
இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவையும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையும், திருஅவையில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த பயண நடவடிக்கைகளில் இணைந்து பணியாற்றும் என்ற நம்பிக்கையையும், கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள் தெரிவித்துள்ளார்
இலத்தீன் அமெரிக்க ஆயர்கள், சந்திப்புக் கலாச்சாரத்தை ஊக்குவிக்க உறுதி எடுத்துள்ளதை, தன் உரையில் குறிப்பிட்ட கர்தினால் செர்னி அவர்கள், இவ்வாறு திருஅவை, எல்லாருடன் உரையாடலில் ஈடுபடவும், உண்மையான ஓர் உடன்பிறந்த உணர்வைக் கட்டியெழுப்பவும் தன்னை அர்ப்பணித்துள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்