தேடுதல்

ஆணுக்கு பெண் சமம் என்பதை வெளிப்படுத்தும் பெண்கள்  ஆணுக்கு பெண் சமம் என்பதை வெளிப்படுத்தும் பெண்கள்  

திருப்பீடம்: ஆண் பெண் சமத்துவம் மக்களாட்சிக்கு அடிப்படை

போரைத் தடுத்துநிறுத்துதல், போர் முடிவுற்ற சூழல்களில் ஒப்புரவு, மறுசீரமைப்பு, சமுதாயங்களின் மீள்கட்டமைப்பு ஆகியவற்றில் பெண்களின் ஈடுபாட்டிற்குப் போதுமான இடம் ஒதுக்கப்படவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே முழுமையான, மற்றும் உண்மையான சமத்துவம் நிலவுவது, நீதியும், சனநாயகமும் நிறைந்த ஒரு சமுதாயத்தின் அடிப்படை அம்சமாகும் என்று, திருப்பீட அதிகாரி பேரருள்திரு Simon Kassas அவர்கள், OSCE அமைப்பின் கூட்டமொன்றில் கூறியுள்ளார்.

OSCE எனப்படும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும், ஒத்துழைப்பு அமைப்பின் நிரந்தர அவையின் 1383ம் கூட்டத்தில், பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் குறித்து அவ்வமைப்பின் 2004ம் ஆண்டின் செயல்திட்டம் பற்றி, தலைமைப் பொதுச்செயலர் Helga Schmid அவர்கள் சமர்ப்பித்த ஆண்டறிக்கை குறித்து கருத்து தெரிவித்தபோது இவ்வாறு கூறியுள்ளார், பேரருள்திரு Simon Kassas.

ஜூலை 21, இவ்வியாழனன்று ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பாக அறிக்கை சமர்ப்பித்த பேரருள்திரு Kassas அவர்கள், சமுதாயத்திற்கு பெண்மைத்தன்மை மிகவும் அவசியம் என்றும், பெண்களின் அனைத்துத் திறமைகளும் மதிக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆண்-பெண் சமத்துவத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு முதல்படி, அரசியல், சமுதாயம், கலாச்சாரம், பொது வாழ்வு என எல்லாத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பின் முக்கியத்துவம் அங்கீகரிக்கப்படவேண்டும் என்றும், போரைத் தடுத்துநிறுத்துதல், போர் முடிவுற்ற சூழல்களில் ஒப்புரவு, மறுசீரமைப்பு, சமுதாயங்களின் மீள்கட்டமைப்பு ஆகியவற்றில் பெண்களின் அதிகமான ஈடுபாட்டிற்குப் போதுமான இடம் ஒதுக்கப்படவேண்டும் என்றும், அத்திருப்பீட அதிகாரி கூறியுள்ளார்.

ஆண்-பெண் சமத்துவத்தைக் கொணர்வதில், OSCE அமைப்பு ஆற்றிவரும் பணிகளுக்கு, திருப்பீடத்தின் சார்பில் பாராட்டையும், அரசியல், மற்றும் பொது வாழ்வில் பெண்கள் பாதுகாப்பாகப் பணியாற்ற இப்பணிகள் உதவும் என்ற நம்பிக்கையையும் பேரருள்திரு Kassas அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2022, 14:51