தேடுதல்

பேராயர் கபிரியேலே காச்சா பேராயர் கபிரியேலே காச்சா  

அணுசக்தி, அமைதி நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட...

அணு சக்தி தொழில்நுட்பங்கள், அமைதிக்கும், மனிதரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் உதவவேண்டுமேயொழிய, அவை போரை ஊக்குவிக்கப் பயன்படுத்தப்படக்கூடாது – பேராயர் காச்சா

மெரினா ராஜ்- வத்திக்கான்

அணு சக்தி, அமைதியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் என்று, ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் உலக அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் குறித்த பத்தாவது மறு ஆய்வு கருத்தரங்கில்  திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய பேராயர் கபிரியேலே காச்சா அவர்கள் கூறியுள்ளார்.

இம்மாதம் முதல் தேதியிலிருந்து 26ம் தேதி வரை நியுயார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் இக்கருத்தரங்கில் உரையாற்றிய, ஐ.நா.வில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் காச்சா அவர்கள், IAEA எனப்படும் அணு சக்தி தொழில்நுட்பம் பயனுள்ள முறையில் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்கும் உலக அணு சக்தி ஆய்வு நிறுவனத்திற்கு திருப்பீடத்தின் ஒத்துழைப்புக்கும் உறுதியளித்துள்ளார்.

அணு சக்திப் பயன்பாட்டின் நன்மைகள், தீமைகள்

ஐ.நா.வின் உறுப்பு நாடுகளும், இந்நிறுவனத்திற்கு தங்களின் ஆதரவை வலுப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ள பேராயர் காச்சா அவர்கள், புற்றுநோய் சிகிச்சை, அறுவடை போன்றவற்றை மேம்படுத்துவதற்கும், தண்ணீர் விநியோகத்தைப் பாதுகாப்பதற்கும், பெருங்கடல் மாசடைவதைக் கண்காணிப்பதற்கும் அணுசக்தி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதைப் பாராட்டியுள்ளார்.   

அதேநேரம், அணுசக்தி தொழில்நுட்பம் மிகக் கடுமையான பிரச்சனைகளையும் உருவாக்காமல் இல்லை என்றுரைத்துள்ள பேராயர் காச்சா அவர்கள், அணு சக்தி தொழில்நுட்ப ஆய்வுகள், அமைதிக்கும், மனிதரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் வழிவகுக்கவேண்டுமேயொழிய, அவை போரைக் குறிவைத்து மேற்கொள்ளப்படக் கூடாது என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பது பற்றியும் எடுத்துரைத்துள்ள பேராயர் காச்சா அவர்கள், IAEA நிறுவனம், கஜகஸ்தானில் தொடங்கியுள்ள யுரேனிய வங்கிக்கு திருப்பீடம் தனது வரவேற்பை அளித்துள்ளது, அதேநேரம், அணு எரிபொருள் மறுசுழற்சி நடவடிக்கை பல நாடுகளுக்கும் உதவ ஆவனசெய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2022, 16:15