தேடுதல்

கர்தினால் யோசேப் தொம்கோ கர்தினால் யோசேப் தொம்கோ  

கர்தினால் தொம்கோ, 98வது வயதில் இறைபதம் அடைந்தார்

கர்தினால் தொம்கோ அவர்களின் இறப்போடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 206, மற்றும் 80 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 116

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் முன்னாள் தலைவரான கர்தினால் யோசேப் தொம்கோ அவர்கள், தனது 98வது வயதில் ஆகஸ்ட் 08, இத்திங்கள் இத்தாலி நேரம் காலை 5 மணிக்கு உரோம் நகரில் இறைபதம் அடைந்தார்.

சுலோவாக்கியா நாட்டைச் சேர்ந்த கர்தினால் தொம்கோ அவர்கள், கர்தினால்கள் அவையில் மிகவும் வயதுமுதிர்ந்தவராக இருந்தார். இவர் 1985ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

இவ்வாண்டு ஜூன் 25ம் தேதி கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் உரோம் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்தினால் தொம்கோ அவர்கள், ஆகஸ்ட் 6, இச்சனிக்கிழமையன்று இல்லம் திரும்பினார். அவரைப் பராமரித்து வந்த புனித வின்சென்ட் தெ பவுல் சபை அருள்சகோதரிகள் தொடர்ந்து பராமரித்து வந்தனர்.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கர்தினால் தொம்கோ அவர்களை மருத்துவமனையில் சென்று சந்தித்துள்ளார்.

கர்தினால் தொம்கோ அவர்களின் இறப்பை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள சுலோவாக்கிய ஆயர் பேரவை, கர்தினாலின் ஆன்மா நிறையமைதி அடையச் செபிப்பதாகவும், உரோம் நகரிலும், அதைத் தொடர்ந்து Košice நகரிலும் அவரது இறுதி வழியனுப்பும் திருவழிபாடு குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

98 வயது நிரம்பிய கர்தினால் தொம்கோ அவர்கள் இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 206. இவர்களில் புதிய ஒரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய எண்பது வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 116 ஆகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2022, 15:08