லாம்பெத்தில் கர்தினால் தாக்லே: ஒன்றிணைந்து கனவு காண்போம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
பிரித்தானியாவின் கென்ட் பல்கலைக்கழகத்தில், ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை நடத்திய 15வது லாம்பெத் பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றிய, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், ஒன்றிணைந்து கனவு காண்போம் என்று அழைப்புவிடுத்துள்ளார்.
“கடவுளின் உலகிற்காக அவரது திருஅவை: ஒன்றிணைந்து பயணித்தல், செவிமடுத்தல், மற்றும், சான்றுபகர்தல்” என்ற தலைப்பில், இக்கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், திருத்தூதர் பேதுருவின் முதல் திருமடலில் குறிப்பிடப்பட்டுள்ள, நமக்கு முன்னோக்கியிருக்கும் திருஅவை குறித்துப் பேசினார்.
இங்கிலாந்தின் கான்டர்பரி ஆங்லிக்கன் பேராயர் ஜஸ்டீன் வெல்பி அவர்களின் அழைப்பின்பேரில் இக்கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் தாக்லே அவர்கள், பேதுருவின் இத்திருமடல், அடக்குமுறை மற்றும், துன்பங்களுக்கு மத்தியில் கிறிஸ்தவர்களாகிய நாம், நம்பிக்கை மற்றும், செயல்பாட்டில் உறுதியாய் இருக்க அழைக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடுகின்றது என்று கூறியுள்ளார்.
அந்நியர்களாக அல்லது, நாடு கடத்தப்பட்டவர்களாக உணர்பவர்களுக்கென்று இம்மடல் எழுதப்பட்டுள்ளது எனவும், இது இக்காலத்தில் கட்டாயமாகப் புலம்பெயர்வோர், போர், மனித வர்த்தகம், கட்டாயவேலை போன்றவற்றுக்குப் பலியாகுவோர் ஆகியோர் குறித்து சிந்தித்துப் பார்க்கச் செய்கிறது எனவும் கர்தினால் தாக்லே அவர்கள் கூறியுள்ளார்.
அந்நியரை நம் மத்தியில் வரவேற்கவேண்டும் எனவும், இக்காலப் பிரச்சனைகளால் நம் மத்தியில் பல நேரங்களில் புறக்கணிக்கப்படும் புதிய அந்நியர்களாக இவர்கள் இருக்கின்றனர் எனவும் உரைத்த கர்தினால் தாக்லே அவர்கள், நாம் ஒன்றிணைந்து நடப்பதற்கு தாழ்ச்சி தேவைப்படுகின்றது என்றும் கூறியுள்ளார்.
ஜூலை 26ம் தேதி முதல், ஆகஸ்ட் 8, இத்திங்கள் வரை கென்ட் பல்கலைக்கழகத்தில், ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை 15வது லாம்பெத் கருத்தரங்கை நடத்தியது. பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இக்கருத்தரங்கில் ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபை, அதன் உலகளாவிய மறைப்பணி, உலக விவகாரம் போன்றவை பற்றி கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. இந்த பன்னாட்டு கருத்தரங்கு, 1867ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்